இந்தியாவில் தினசரி தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததையடுத்து, பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டது. தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தும் வகையில் மத்திய அரசு புதிய தடுப்பூசி கொள்கையை அமல்படுத்தியது.
இந்த கொள்கை அமலுக்கு வந்த ஜூன் 21ம் தேதி மட்டும் 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்து ஒருவாரம் மட்டுமே கடந்துள்ள நிலையில் தினசரி தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை குறைந்துள்ளது.
நேற்றைய புள்ளிவிவரங்களின்படி நாடு முழுவதும் 27 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது ஜூன் 21ம் தேதி செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கையை ஒப்பிடும் போது 68 சதவீதம் குறைவாகும். இதனிடையே தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது