சமூக வலைதளமான ட்விட்டரில் விலங்குகளின் பெயர்களில் தொடங்கப்பட்டுள்ள கணக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் பின்னணி என்ன என்பது பற்றி காண்போம்.
மத்திய அரசை திமுகவினர் ஒன்றிய அரசு என குறிப்பிட தொடங்கியதே இதற்கான ஆரம்ப புள்ளியாகும்.
இதனையடுத்து பாஜக ஆதரவாளரும், மூத்த பத்திரிகையாளருமான மாலன் தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என அழைக்க வேண்டும் என கருத்து பதிவிட அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு தமிழ்நாடுதான் சரியான வார்த்தை என்பது திமுகவினர் உட்பட தமிழ் பிரியர்களின் வாதமாக இருக்க இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பதிவு எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் ஆனது.
அந்த பதிவில் “இவனுங்க பேசற பேச்ச பார்த்தா டைனோசர் கூட தமிழ்லதான் பேசிச்சின்னு சொல்லுவானுங்க போல இருக்கு” என தெரிவிக்க உடனடியாக ட்விட்டரில் விலங்குகள் பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டன.
#ஒன்றியஉயிரினங்கள் என்ற பெயரில் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டு டைனோசர், சிங்கம், யானை, வரையாடு, மண்புழு ஒட்டுமொத்த உயிரினங்களையும் ட்விட்டர் பக்கம் இழுத்து வந்தனர் நம் நெட்டிசன்கள்.
இதற்கும் இந்து மக்கள் கட்சி அசராமல் பதிலடி கொடுக்க கடந்த சில தினங்களாக அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இது தான் ட்ரெண்டிங்.
இதில் விலங்குகள் ட்விட்டரை பயன்படுத்தினால் எப்படி இருக்கும் என காமெடியாக பதிவிட ஒவ்வொரு கணக்கையும் ஆயிரக்கணக்கான மக்கள் பின் தொடர்வது இந்த யுத்தத்தின் வெற்றி என சொல்லலாம்.
– மூவேந்தன்