கலைஞரின் பாராட்டை பெற முடியாத ஏக்கம் துரத்துவதாக அவரது பேரனும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.கருணாநிதியின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கொரோனா காரணமாக தொண்டர்கள் அவரவர் வீடுகளில் நினைவு தினத்தை அனுசரிக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனிடையே நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தங்கை கனிமொழி எம்.பி., திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் கருணாநிதியின் பேரனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “முத்தமிழறிஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது.
அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம். #RememberingKalaignar” என தெரிவித்துள்ளார்.