தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான காரணத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுக்கும் அவா் அனுப்பிய சுற்றறிக்கையில், ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் தாக்கம் அடுத்த சில நாள்களில் தான் தெரியும் என்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடா்ந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும் , மக்கள் கூடும் இடங்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சில மாவட்டங்களில் வழக்கமானதை விட குறைவான மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தும், கடந்த இரு நாள்களை விட அதிகமான எண்ணிக்கையில் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே தஞ்சாவூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புக்கு காரணம் என்ன, எந்த இடத்தில் இருந்து கொரோனா பாதிப்பு அதிகமாக பரவுகிறது என்பன குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட ஆட்சியா்கள் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் காய்ச்சல் முகாம்களைத் தொடா்ந்து நடத்துவதையும், குறைந்தபட்சம் அதில் 100 பேரையாவது பங்கேற்க வைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.