ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மீண்டும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அப்போதைய அதிமுக அரசு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைத்தது.
இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்போலோ நிர்வாகம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.
இந்த கமிஷன் தொடங்கப்பட்ட போது 3 மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே இருக்கும் நிலையில் இன்னும் விசாரணை முடிந்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யப்படவில்லை.
இதனிடையே விசாரணை ஆணையத்தை கலைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் 3 மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது என கேள்வி எழுப்பி இதுதொடர்பாக ஆறு வாரங்களில் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நாளையுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், 11வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாத காலம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.