திணிக்கப்பட்டதா திராவிடம்? – நூல் அறிமுகம்

SHARE

இந்த நூல் திராவிடம் எனும் சொல்லை அடிப்படையாக கொண்டு தொகுத்து ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் திராவிடம் எனும் சொல் தமிழ்ச் சொல் இல்லை என்பதை நிறைய சான்றுகளுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய் என நாவுக்கரசர் பாடினார். ஆரியன் என்னும் சொல்லுக்கு எதிர்மறையான சங்க சொல் தமிழன் என்பதே அவர் காலத்தில் வழங்கி வந்துள்ளது என்பது தெளியப்படும்.

தமிழுக்கான மாற்றுச்சொல், தமிழக, ஆந்திர, கருநாடக,கேரளப் பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு, பார்ப்பனிய மேலாண்மைக்கு எதிராக உயர்த்திப் பிடிக்கப்பட்ட கருத்துநிலை ஆகிய மூன்று அடிப்படைகளில் மட்டுமே திராவிடம் என்ற சொல் இருபதாம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை ஆளப்படுகிறது என்பது என்கிறார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.

திராவிடம், திராவிடர்-இந்தச் சொற்கள் பெரியார் பிறப்பதற்கு (1879) இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பே (1856) தமிழ் மண்ணிற்கு அறிமுகமானவை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழக அரசியலை ஆக்கிரமித்திருந்தவை.

தெலுங்கர், கன்னடியர், மலையாளிகளைத் தமிழர்களாக்க வேண்டுமானால் திராவிடர் என்று சொல்லித்தான் ஆக்க முடியும். திராவிடமே தமிழ். தமிழே திராவிடம் என்னும் புத்துணர்ச்சியைத் திராவிட மக்கள் பெறுவார்களாக (நூல்: மொழியாராய்ச்சி, 1948, வள்ளுவர் பதிப்பகம், பவானி) என உணர்ச்சியில் கொந்தளிக்கிறார்.

திராவிடம் என்பது வடமொழி என விளக்கம் சொல்லப்பட்ட போது, ”அதைப்பற்றிய கவலையோ ஆராய்ச்சியோ தேவையில்லை. காபி என்பது ஆங்கிலச் சொல் என்று எவனாவது காபி குடிக்காமல் இருக்கின்றானா?” என எதிர்க்கேள்வி கேட்டார் பெரியார்.

”திராவிட சமுதாயம் என்று நம்மைக் கூறிக்கொள்ளவே கஷ்டமாயிருக்கும் போது தமிழர் என்று எல்லோரையும் ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால் கஷ்டங்கள் அதிகமாகும். இங்கேயே பாருங்கள் கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாதுரை தமிழர், இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழனெனச் சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால், எல்லா கன்னடியர்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தெலுங்கரும் அப்படியே.

எனவே, திராவிட சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நாம். நம்நாடு திராவிட நாடு என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபனை இருக்காது. அது நன்மை பயக்கும். எனவே, இத்தகைய கேவல நிலையொழிய, ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கட்சியாக மாற வேண்டும். சேலத்திலே நடைபெற இருக்கும் மாகாண மாநாட்டிலே இதையே முதல் தீர்மானமாகக் கொண்டுவர வேண்டும்” என்று பெரியார் கேட்டுக் கொண்டார். அதன்படியே, 27.8.1944-இல் சேலத்தில் நடந்த நீதிக்கட்சியின் 16ஆவது மாநாட்டில் (இதுதான் நீதிக்கட்சியின் கடைசி மாநாடு) கட்சியின் பெயர் ‘திராவிடர் கழகம்’ என மாற்றப்பட்டது.

திராவிடர் கழகம் பெயர் மாற்றத்திற்குக் கி.ஆ.பெ.விசுவநாதம், மு.அண்ணல்தங்கோ. சண்டே அப்சர்வர் பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழர் கழகம் என ஆகி அழைக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. இதற்கு மறுப்புத் தெரிவித்த பெரியார் ‘பார்ப்பான் (ஆரியன்) வந்து, நானும் தமிழன்தான் என்று கூறிக்கொண்டு உள்ளே புகுந்துவிடுவான்’ என விளக்கமளித்தார்.

14.3.1943.சேலம் செவ்வாய்ப்பேட்டையில் கம்ப ராமயாணம், பெரிய புராணம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றிய சொற்போர். இதில் பங்கேற்றுப் பேசிய நாவலர் சோமசுந்தர பாரதியார் தமதுப் பேச்சின் இறுதியில், ‘தமிழன் தன்னைத் தமிழனென்று கூறிக்கொள்ளவும் வெட்கப்பட்டுத் திராவிடன் திராவிடன் என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது?’ எனும் கேள்வியை முன்வைத்தார்.

குடிஅரசு இதழில் 23.10.1938 அன்று பெரியார்,

”உதைக்கும் காலுக்கு முத்தமிட்டுப் பூசை செய்கிறோம். மலத்தை மனதார முகருகிறோம். மானமிழந்தோம். பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத்தானா தமிழன் உயிர் வாழ வேண்டும்? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி, நம் தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போக வடநாட்டானுக்கும். தமிழரல்லாதவனுக்கும் நாம் படிக்கல் ஆகிவிட்டோம். இனியாவது, தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள்.

உங்கள் கைகளில், தமிழ்நாடு தமிழருக்கே என்று பச்சைக் குத்திக் கொள்ளுங்கள்! உங்கள் வீடு தோறும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள்! புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்குப் பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச் சின்னாபின்ன மாக்குங்கள். தமிழ்நாடு தமிழருக்கே” – என்றார்.

ஆனால், நீதிக்கட்சித் தலைவரான பின்பு பெரியாரின் குரலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. முன்பு தமிழ்நாடு தமிழருக்கே என்று பேசியவர், இப்போது திராவிடநாடு குறித்தும், ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்றும் பேசத் தொடங்கிவிட்டார்.

”தமிழ்நாடு என்பது திராவிட நாடு என்றும், திராவிட நாடு என்பதானது இன்னது என்றும் வெகுகாலமாகவே அய்ரோப்பிய அறிஞர் முதல் பல உலக ஆராய்ச்சிக்காரர்களும், இந்திய சரித்திர ஆராய்ச்சியாளர்களாலும் எல்லை காட்டி வகுக்கப் பட்டிருக்கிறது என்றும் நான் இது விஷயமாய்ப் பேசுகிற இடங்களில் எல்லாம் இதைப்பற்றி விளக்கிப் பேசியே வந்திருக்கிறேன்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலாகிய மொழிகளைத் தாய் மொழியாகப் பேசிவந்த மக்களையே மிகுதியாகக் கொண்ட நாடுகள் இன்று திராவிடம் என்று சொல்லப்படுவது யாவரும் அறிந்ததேயாகும்.

திராவிடமே தமிழ் என்று மாறிற்று என்றும் தமிழே திராவிடம் என்று மாறிற்று என்றும் சரித்திர ஆசிரியர்கள் முடிவு கண்டதாகக் குறிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன. பழங்காலத்து அகராதிகளும் அப்படியே சொல்லுகின்றன” என்று சொன்னார் பெரியார்.

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று கூறி திராவிடத்தை ஏற்றுக் கொண்ட பெரியார் இந்த இடத்தில் திராவிடம் என்ற சொல்லை தன் பகுத்தறிவு கொண்டு ஆராய முற்படவில்லை என்றே கருதலாம். ஏன் என்றால் இவர் சுட்டி காட்டிய சான்றுகள் அனைத்தும் மொழி ஆய்வின் அடிப்படையில் மிகவும் பிழையானவை.

தினமணிக் கதிர் 11.3.2012 இதழில் திராவிட நாடு சாத்தியமா என்று கருத்தறிய வழக்கறிஞர் வி.பி.ராமன் இல்லத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டத்தைச் சம்பத் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு நெடுஞ்செழியன், கருணாநிதி, என்.வி.நடராசன், ஆசைத்தம்பி, மதியழகன் ஆகிய முக்கிய பிரமுகர்களும் வந்திருந்தனர்.

அண்ணாவுக்குக் காஞ்சிபுரத்துக்கு டிரங்கால் போட்டு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றும் அழைத்தனர். அண்ணாவும் அவசரமாகப் புறப்பட்டு வந்தார். திராவிட நாடு சாத்தியமில்லை என்பதற்குச் சம்பத் தமது வாதங்களை எடுத்து வைத்தார். அதைக்கேட்டுக் கொண்டிருந்த அண்ணா, ‘என்ன சம்பத்து, நீ டில்லி பார்லியமண்டுக்குப் போய், ரஷ்யாவெல்லாம் சுற்றிப் பார்த்தபிறகு இதைச் சொல்ற, உங்க அப்பா திராவிட நாடுன்னு சொன்னப்பவே, கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும்’ என்றார்.

உடனே சம்பத், ‘கிடைக்காதுன்னு தெரிஞ்ச பிறகு, அதைச் சொல்லாதது மோசடியல்லவா?’ என்று கேட்டார். அதற்கு அண்ணா, ‘அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடுன்னு வெறியேற்றி விட்டோம். இப்போது போய் இல்லைன்னு சொன்னா, தொண்டன் விடுவானா?. அதனாலேயே படிப்படியாக உணர்த்திப் பின்னர் விட்டுவிடலாம். அதுவரையில் இதுபற்றி பேச வேண்டாம். விரிவாக விவாதிக்க வேண்டாம்’ என்றார்.

தமிழ் உள்ளிட்ட பன்னிரண்டு மொழிகளையும் ஒரே குடும்பமாக அடக்கிய கால்டுவெல், அதற்குத் திராவிடம் என்று பெயரிட்டார். இம்மொழி பேசுவோரைத் திராவிடர் என்றும் அழைத்தார். திராவிட எனும் வார்த்தையை மனு ஸ்மிருதி, மகாபாரதம், பாகவத புராணம் போன்ற சமஸ்கிருத இலக்கியங்களில் இருந்து எடுத்துக் கையாண்டதாகக் கூறும் அவர், அதனைத் திராவிடர் என்றும் நீட்டித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கிறார்.

கால்டுவெல்லுக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மொழியியல் ஆய்வு மேற்கொண்டவரும், தமிழில் மிகவும் ஈடுபாடு கொண்டவருமான எல்லீஸ், ‘தென்னிந்திய மொழிகள் குடும்பம்’ என்றே குறிப்பிடுகிறார். திராவிட எனும் சொல்லை அவர் கையாளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உண்மையில், மலையாளியும், தெலுங்கரும், தமிழரும் இணைந்து உருவாக்கிய நீதிக்கட்சிக்குத்தான் திராவிடக் கட்சி என்று பெயரிட்டு இருக்க வேண்டும். திராவிட அடையாளத்துடன் அனைவரையும் ஒருங்கிணைத்த டாக்டர் நடேசனாரால், அதை அங்கு நிலைநிறுத்த முடிவில்லை. ‘இதனாலேயே கடைசி வரை மனம் வெறுத்து நடேசனார் செத்தார்’ என்பார் அண்ணா.

கட்சியின் தமிழ்ப் பத்திரிகைக்குத் ‘திராவிடன்’ என்று பெயர் வைத்துக் கொண்ட அவர்களால், திராவிட மரபு, திராவிடத் தலைவர்கள் என்றெல்லாம் பேசிய தியாகராய செட்டியாரால், கட்சிக்குத் திராவிடப் பெயரைச் சூட்ட முடியவில்லை. ஏனென்றால் இந்த அடையாளத்தை அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே எதார்த்தம்.

பெரியாரும் அண்ணாவும் முன்னெடுத்த திராவிட இயக்கம் முற்றிலும் தமிழர்க்கான இயக்கமன்று. தமிழரையும் ஒரு கூறாக இணைத்துக் கொண்ட தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் ஆகியோருக்கான ஒரு கூட்டு இன இயக்கம். அதை வெளியே சொல்வது உசிதமல்ல என்று கருதி, திராவிடம் என்றால் அதில் பார்ப்பனர் வர முடியாது, திராவிடர் என்பதுதான் இனப்பெருமை என்றெல்லாம் கூறி, ஒப்பனை வேலை செய்தார்கள்.

”தமிழ் என்னும் தென்மொழிச் சொல்லே வடமொழியில், திராவிடம் என மருவியது என்று சொல்வது, பாட்டன் திருமணத்தில் பேரன் சந்தனத் தாம்பூலம் பரிமாறினான் என்பதற்கும் இதற்கும் யாது பேதம்?’ என்று 1895லேயே சி.வை.தாமோதரம் பிள்ளை கேட்டார்.

திராவிடம் எனும் வடசொல் தமிழாக மருவியது என கால்டுவெல் சொன்னதற்கு, பாவாணர் எதிர்ப்புத் தெரிவித்து இருந்தார். தமிழே திராவிடம் எனத் திரிந்தது என்றும், திராவிடத்தாய் என்றும் சொல்லாராய்ச்சியில் (1944இல்) ஈடுபட்ட தேவநேயப் பாவாணர், திராவிடம் தீது என்றும் அறிவித்திருக்கிறார்.

”வடமொழியை நட்பாகக் கொள்ளும் திராவிடத்திற்கும் பகையாகக் கொள்ளும் தமிழிற்கும், ஒரு சிறிதும் நேர்த்தம் இருக்க முடியாது. ஆதலால் தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றித் திரவிடம், திரவிடன். திரவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது. திரவிடம் அரையாரியமும் முக்காலாரியமு மாதலால், அதனோடு தமிழை இணைப்பின், அழுகலோடு சேர்ந்த நற்கனியும் கெடுவது போல் கெட்டுப்போம். பின்பு தமிழு மிராது. தமிழனு மிரான். இந்தியா முழுவதும் ஆரியமாய் விடும்” – என்பதே அவர் கருத்து. (நூல்: தேவநேயம் தொகுப்பு: புலவர் இரா.இளங்குமரன்)

சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிமல்ல. அப்படியானால், தமிழ் நாகரிகமாகத்தானே இருக்க முடியும்? இதை நேரடியாகச் சொல்வதில் வரலாற்று ஆய்வாளர்களுக்கு என்ன தயக்கம்? இதில் எங்கிருந்து வந்தது திராவிட நாகரிகம்? இதனால்தான் புலவர் இறைக்குருவனாரும், ‘அப்பண்டைக் காலத்தில் தெலுங்கு, கன்னடமே தோன்றாத நிலையில் இன்றைக்குப் பொருள் கொள்ளப்படும் திராவிடமாக இருக்க முடியாது என்பது வெளிப்படை! என்கிறார்.

தமிழ்ச்சூழலில், 18-ஆம் நூற்றாண்டில் தாயுமானவர்தான் முதன் முதலில் திராவிட எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஒரு மொழிக்குரிய பெயர் இனத்திற்கானப் பெயராக பிஷப் கால்டுவெல்லின் ஆய்வினால் மாற்றப்படுகிறது. அதன் பின்னரே, தமிழ்மண்ணில் திராவிடம் பரவலாக்கம் பெறுகிறது.

கால்டுவெல் வகுத்தளித்த அதே பாதையில்தான் பெரியாரின் பயணமும் இருந்தது. அதனால்தான், திராவிடர் எனும் சொல்லுக்கு விளக்கமளிக்க முற்பட்ட அவர், திராவிடர் என்பது என்ன நாம் கற்பித்த ஒரு பெயரா? இது இன்று நேற்று ஏற்பட்டதல்லவே! திராவிடர் என்ற பெயரை மநுதர்ம நூலில் காணலாமே! இராமாயணத்தில், பாரதத்தில்கூட இதற்கு ஆதாரம் உண்டே  என்று கேட்கிறார்.

தமிழ் இலக்கியங்களில் திராவிட எனும் வார்த்தையே இல்லையே? என்று அண்ணாவிடம் கேட்டபோது, ‘பாகிஸ்தான் எனும் வார்த்தைக் கூடத்தான் குரானில் இல்லை. ஆனாலும் ஜின்னா அந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லையா?’ என எதிர் கேள்வி கேட்கிறார். 

குரானில் என வேண்டுமானால் பாகிஸ்தான் எனும் வார்த்தை இல்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழர்களுக்கு வேதமாக இருக்கின்ற சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் தமிழ், தமிழன், தமிழ்மண், தமிழ்நாடு என்ற குரல்கள்தானே கேட்கின்றன. அவற்றை கேட்க மறுப்பதேன்? என்று அண்ணாவிடம் யாரும் கேட்கவில்லை.

1940களின் இறுதியில் ‘தமிழே திராவிடம் திராவிடமே தமிழ் என்னும் புத்துணர்ச்சியைத் திராவிட மக்கள் பெறுவார்களாக!’ என முதலில் ஆனந்த கூத்தாடிய பெரியார், ‘தெலுங்கர், கன்னடியர், மலையாளிகளைத் தமிழர்களாக்க வேண்டுமானால் திராவிடர் என்று சொல்லித்தான் ஆக்க  முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தெலுங்கர் தெலுங்கராகவும், கன்னடர் கன்னடராகவும், மலையாளி மலையாளியாகவும் தொடர்ந்து தெளிவாக இருந்தனர். இருக்கின்றனர். பெரியாரின் முயற்சியால் அவர்கள் தமிழர்களாகவில்லை. மாறாகத் தமிழன் திராவிடன் ஆனான். பெரியார், அண்ணா போன்றோரின் எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும், திரைப்படப் பாடல்களினாலும், தமிழர்கள்மீது திராவிட உணர்வு, இயல்பாக அல்ல, வலிந்துத் திணிக்கப்பட்டது. திணிக்கப்பட்டும் வருகிறது.

இங்குதான், பேரா.சுப.வீ.யின், திராவிடம் இயல்பாக மலர்ந்தது, காலத்தால் கனிந்தது, எந்தத் தலைமையினாலும் திணிக்கப்பட வில்லை எனும் வாதங்கள் கேள்விக்குள்ளாகின்றன.

500 அல்லது 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட சரித்திரங்களில் எல்லாம் நம்மைக் குறித்துத் திராவிடர் என்றே எழுதப்பட்டிருக்கிறது’ என்று சொல்லும் பெரியார், ‘பிறகு நம்மை எப்படி அழைத்துக் கொள்வது?’ என்றும் கேட்கிறார். வெறும் ஐநூறு அறுநூறு ஆண்டு கால சரித்திரங்களை மட்டும் பார்க்க முடிந்த இவர்களால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இலக்கியங்கள், தமிழ், தமிழர், தமிழ்நாடு என முழங்கிய குரல்களைக் கேட்கமுடியவில்லை என்பதைவிட, கேட்கத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

தமிழ் என்னும் பெயரும் அதனின்று த்ரமிளம் த்ரமிடம் த்ரவிடம் என முறையே திரிந்து வந்த திராவிடம் என்னும் எத்துணை வேறுபட்ட மொழிகளைக் குறிக்குமோ, அத்துணையே, தமிழர் என்னும் பெயரும் அதனின்று திரிந்த திராவிடர் என்னும் பெயரும் வேறுபட்ட இனத்தாரைக் குறிக்கும்.

தமிழரை அவர் பாதுகாப்பிற்காகத் திராவிடநாடு சேர அல்லது திராவிடரென்று கூறச்சொல்வதெல்லாம் கொக்கு மீன்களின் பாதுகாப்பிற்காகக் கூறியது போன்றதே என்று அறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் கூறுகிறார்.

– யாழினியன் (முகநூல் பதிவு)

ஆசிரியர்: கோ. செங்குட்டுவன்

பக்கங்கள்: 144

விலை:₹120


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

Admin

உலகெங்கும் தமிழர் தடம் – நூல் மதிப்புரை

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ’கர்னலின் நாற்காலி’ – நூல் மதிப்புரை.

‘மு.க.ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்

Admin

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

இரா.மன்னர் மன்னன்

தமிழ்நாட்டை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? சீமான் காட்டம்

Admin

காளைகளைக் காப்பாற்றினோம்… யானைகளை?: அழிவின் விளிம்பில் தமிழர் செல்வம்!.

Admin

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

உயிர் பெறும் தமிழ் நாகரிகம் : அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 8: தொழிற் கை முத்திரையின் வகைகள் (20 – 24)

Leave a Comment