தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்
சென்னை சைதாப்பேட்டையில் நரிக்குறவர் சமுதாயத்துக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு அதிலும் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் நரிக்குறவர் சமுதாயத்துக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு இந்த முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, மா.சுப்ரமணியன்,
கேரளாவில் இதுவரை 18 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழக கேரள எல்லையோர கிராமங்களில் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் கூறினார்.