கிராமத்துக்காரி – இது 90களின் உலகம். பகுதி 2. திருவிழாக்கு போனேன்!.
- அபிநயா அருள்குமார்
பகுதி 1 Link :
”ஆயி(வட்டார வழக்கு)……மத்தியானத்துக்கு பள்ளிக்கூடம் விட்டாலும் விட்டுருவோ!”
”ஏன் பெரியப்பா?” என்றபடி, பழைய சாதத்தை , எருமைத் தயிரில் முக்கி , கொஞ்சம் சுட்ட கருவாட்டை உதவியாக வைத்து வயிற்றுக்காக வழி அனுப்பிக் கொண்டிருந்தேன்!.
இன்னைக்கு கரம்பயத்தாவுக்கு (கரம்பயம் மாரியம்மன் கோவில்) சின்ன திருவுழாவுல ஆயி!!.
இரண்டு பிடி சாதத்தை ஒரே வாயில் குதப்பிக்கொண்டு, ”வுவ்வு, வுவ்வு ….வ்வ்வ்” என்றேன்!.
”சோத்த முழுங்கிட்டு பேசுப்பா!” என்றார் பெரியப்பா சிரித்தப்படி
(பெரியப்பாவுக்கும், பெரியம்மாவுக்கும் இரண்டு மகன்கள் இருக்காங்க. ஆனா தங்கச்சி மகளான என் மீது எப்போதுமே ஒரு அலாதிப் பிரியம். அதனால ”அவளுக்கு விவரம் தெரியுற வரைக்கும் எங்க கூட இருக்கட்டும்” என அம்மாவிடம் பேசி,ச மாதனம் செய்து ஊருக்கே அழைச்சுட்டு வந்துட்டாங்க.)
கடைவாயில் ஒட்டியிருந்த சோற்றுக்கு நாக்கால் விடுதலை அளித்து பின்பு பேசத் தொடங்கினேன் “பா… எனக்கு அமுக்கு கேமு( தண்ணீர் நிரப்பப்பட்ட சிறிய பெட்டிக்குள், பொத்தானை அழுத்தியபடி அதில் இருக்கும் இரண்டு குச்சிகளில் வளையங்களை சேர்க்கும் விளையாட்டு) வாங்கி தரியாப்பா திருவுலாவுல” என ஏக்கம் கலந்த ராகத்தில் காரியவாதியாக வினாவை எழுப்ப!..
நான் எதை செய்தாலும் ரசிக்கும் பெரியப்பா “ம்ம்ம்ம்…வாங்கிக்கலாம் ஆயி. இப்போ பள்ளியொடத்துக்கு போ, நேரமாச்சு!”
”ம்ம்ம்…” கைகளை கஞ்சி குடித்த பாத்திரத்தில் கழுவி விட்டு, பெரியப்பாவின் கரிய தேகத்தில் வியர்வை மணக்க கிடந்த துண்டில் வாயை துடைத்துக்கொண்டு , “டாட்டாப்பா, மா …போயித்து வரேமா” என உரக்க கத்தியபடி நரம்பு பையை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
பெரியம்மா பாத்திரங்களை கழுவியபடி, “போயித்து வாடா எமுட்டு பொட்டுக்கடல” என்றார்.
”ஏல சுகந்தி… போவோமால…” என இரண்டு அடியில் வந்துவிடும் சுகந்தி வீட்டில் எட்டிப்பார்த்தேன்!. அவள் மரத்தால் செய்யப்பட்ட சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் சாந்து பொட்டினை வைப்பதற்கு மும்முரமானாள்.
”ஏல..! சீக்கரமா வாயேன்!”
”ம்ம்ம்… போவோம்ல”. நரம்புப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினோம்!
”சுகந்தி இன்னைக்கு அரப்பள்ளிக்கூடம்தானாமே” என்றேன்
அவளும் “ ஆமால, அப்பா சொல்லிட்டுருந்தவோ! , ஜாலியே..!” எனக் களிக் கூச்சலிட்டாள்
மணி ஒலிக்கும் சத்தம் வீட்டில் கேட்கும் தொலைவுதான் பள்ளிக்கூடம் என்றாலும் அங்கிருந்து ஓட்டம் பிடித்து, எங்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை வந்தடைந்தோம்!.
புத்தகத்தை திறந்து வைத்திருந்தாலும் நாங்களும் சரி, ஆசிரியர்கள் இருவரும் சரி, திருவிழா கொண்டாட்டத்திற்காகத்தான் தயாராகிக்கொண்டிருந்தோம். ஆனாலும் அவ்வபோது சின்ன டீச்சர் “ ஸ்கூல் இன்னைக்கு முழு நேரம் , ஒழுங்கா படிங்க டிக்டேசன் இருக்கு மத்தியானம்” என்றார்.
அந்த வார்த்தைகள் எங்களது நிம்மதியைக் குலைத்துக் கொண்டே இருந்தன!
இருந்தாலும் 12.30 மணிக்காக காத்துக்கிடந்தோம்! ஆனால் அன்று 12.30 மணிக்கும் பள்ளிக்கூட மணி ஒலிக்கவில்லை! அப்போது ஒரு சிறிய சலசலப்பும் தென்பட்டது, அதில் நான் உறுதியானேன். “ ஹைய்யா ! இன்னைக்கு அரப்பள்ளிக்கூடம்தான்”
“ இன்னைக்கு கோவில் திருவிழானால ஸ்கூலுக்கு லீவ் இப்போ, எல்லாரும் ஜாக்கிரதையா போயிட்டு சாமி கும்புட்டு வாங்க! சரியா? “ என்றார் பெரிய டீச்சர்.
”சரீ… டீச்சர்!” – என்று எல்லோரும் புத்தக பைகளை எடுக்க மும்மரமானோம்..
”டிங் டிங் டிங்…!”
ஹே..ஹே….ஹே… என்ற இரைச்சலுடன் பள்ளியை விட்டு வீட்டிற்கு விரைந்தோம் ,
”மா! எங்களுக்கு லீவு வுட்டாங்களே..!” என புத்தக பைய தூர வீசிவிட்டு ! அலமாரியில் வைக்கப்படிருந்த உப்பு போட்டு வறுத்த மக்கா சோளத்தை பதம் பார்க்கத் தயாரானேன்!
”யப்பா! சோறு திண்ணுடா! அதை திண்ணா எப்படி பசிக்கும் உனக்கு?!” பெரியம்மா
“போம்மா…” என்றபடி அரைக்கத் தொடங்கினேன். ஆம் அப்போதும் நான் ஒரு திண்ணிப்பண்டாரம்தான்
அந்தியும் வந்தது!. போன பொங்கலுக்கு எடுத்த சிவப்பு நிற பாவாடையும், சந்தன நிறத்திலான ஒரு அரைக்கை சட்டையும் அணிந்திருந்தேன். இரண்டு குடுமிக்கு இடையில் சாமந்தி பூவினை பாலமாக அமைத்து தயாராக்கியிருந்தார் பெரியம்மா!
ஆடை இல்லாத குழந்தைக் கடவுள் இலையில் அமர்ந்து ஒற்றை காலை தலையில் வைத்தபடி இருப்பாரே! அந்தப் படம் போட்ட டப்பாவில் இருந்த பவுடரை கொட்டிக்கொட்டி முகத்தில் அப்பிக் கொண்டிருந்தேன்.
அக்கம் பக்கத்தில் இருக்கு மாமியையும், சித்தியையும் தயாராகிவிட்டீர்களா என பெரியம்மா ஏவல் விடச்சொல்லியிருந்தார்.
“வெங்குடி அக்கா அம்மா, எங்க அம்மா கிளம்பிடியலானு கேட்க சொன்னவோ..!”
”ம்ம்ம்…. இந்தா எருமைய புடிச்சி கட்டிப்புட்டு வாரேன்டி! முன்னால போங்க… “
“ சந்திரா சித்தி , கிளம்பிடியலானு பெரியம்மா கேட்க சொன்னவோ“ என வீடு விடாக பாவாடையை தூக்கி பிடித்து , ஓடிக்கொண்டிருந்தேன்.
இறுதியா சுகந்தி வீட்டிற்கு போக வேண்டியிருந்தது. அவளும் நானும் ஒரே நிற ஆடையை விசேசங்களுக்கு உடுத்துவது வழக்கம்தான் என்றாலும் ஒருவருக்கு ஒருவர் அழகு பரிமாற்றம் செய்யவும் தவறுவதில்லை.
”சுகந்தி, இன்னைக்கு அமுக்கு கேமு வாங்கி தருவாறே எங்க பெரியப்பா!”
”நான் இன்னைக்கு பாம்பு வாங்குவேன்! அது பாக்க கண்டம் கண்டமா , உசுறா இருக்க மாதிரியே இருக்கும்ல பூச்செலுவி!”
”ம்ம்ம்ம்ம்ம்…” என விழிகளை விரித்து வாய்களை குவித்தேன் அதில் ஆசையும் , ஆர்வமும் சற்று கூடுதலாகத்தான் இருந்தது!
மாரியம்மன் கோவிலின் நுழைவு வாயிலை நெருங்கும் தருணத்தில் எல்லாம் எப்பொழுதும் எனக்கு பயம் தொற்றிக்கொள்ள தவறுவதில்லை.காரணம்
மாமன்கள் பட்டாளம்!.
ஸ்டாலின் மாமா ( பெரும்பாலவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்பதால் ஸ்டாலின், மாஸ்கோ என்ற பெயர்களை கத்திரிக்கொல்லை கிராமத்தில் பார்க்க முடியும்), ராமக்கட்டி மாமா(ராமகிருஷ்ணன்) , மாஸ்கோ அண்ணன், மாரிமுத்து அண்ணன் என 15 வயது முதல் 25 வயதிலான மாமன்கள் , வெள்ளை வேஷ்டி, சட்டை அணிந்து ஒரு பருத்தி பந்து போல நிற்பார்கள்!
அருகில் நெருங்கும் பொழுதெல்லாம், எனக்கு பக் என இருக்கும் காரணம் பயம் அல்ல. வெட்கம்! .
”வாடி என் அத்த மவளே” , “என்னாடி டிரஸ் இது “ , ”மாமன மயக்கவா”, “எப்போடி கட்டிக்கலாம்”, இப்படியான மாமன்களின் கேள்விகள் என்னை அந்த வயதில் எரிச்சலூட்ட தவறுவதில்லை.
ஒரு 10 ரூபாய் பணத்தை ”இந்தாடி” என ஸ்டாலின் மாமா நீட்டினார்.(10 ரூபாய் அப்போது பெரிய காசுதான்)
”வேணாம் மாமா , வேணா…” என வெட்கம் கலந்து நெளிந்துகொண்டே பெரியம்மாவை பார்த்தேன்
“ஆயா வாங்கிக்கடா , மாமாதானே “ என்றார் பெரியம்மா.
வாங்குவதற்காக கைகளை நீட்டும் பொழுது, வெடுக்கென பின்னோக்கி இழுத்துக்கொண்டார், “ கட்டிக்கிறேனு சொல்லு தர்றேன் ” என என் இரு கைகளையும் இறுகப்பிடித்துக்கொண்டார்.
“மா…” மறுபடியும் நெளிந்து கொண்டே பெரியம்மாவை பார்க்க,
“ ம்ம்ம் சொல்லி வாங்கிக்க , இவோளா உனக்கு மாப்புள…” என சிரித்துக்கொண்டே கூறினார்,
”சரி கட்டிக்கிறேன் தாங்க “ என வெட்கியபடி கூறினேன்! எல்லோரும் கொள்ளென சிரிக்க அந்த இடத்திலேயே கொண்டாட்டம் தொடங்கியது!
சுகந்தி எப்பொழுதும் இது போன்ற கிண்டல்களை சந்திப்பதில்லை, காரணம் அவளும் என் மாமன் மகள்தான்!.
அம்மனின் அலங்காரத்தைக்கண்டு ஒரு வீபூதி பொட்டலம் வாங்குவது எப்போதுடா என இருக்கும் எங்களுக்கு காரணம் “ மா..விளாட்டு சாமான் வாங்கித்தாமா” என ஏங்கும் அத்தனை குழந்தைகளுக்கும் அம்மாக்கள் சொல்லும் ஒரே பதில் “ சாமி கும்புட்டு வற்றப்ப வாங்கித்தாரேன்பா” என்பதுதான்!.
ஒரு வழியாக சாமியும் கும்பிட்டு, ஆசைப்பட்ட அமுக்கு கேமுடன் ஒரு ஆப்பிள் பலூனும் வாங்கியாச்சு! ஆனால் எப்போதும் ஆசைப்படும் அந்த பெரிய பலூன் அதாவது பலூன் குள்ளே பலூன் இருக்குமல்லவா , அதை வாங்குவது என்பது மட்டும் எனக்கு எட்டாக்கனியாகிவிட்டது!.
அடுத்த கட்டமாக பாட்டு கச்சேரி, அப்படியென்றால் பாட்டு பாடுவது அல்ல , அப்போதைய ஹிட் பாடலுக்கு நடனங்கள் ஆடுவதற்கு வெளியூரிலிருந்து ஆட்கள் வந்திருந்தார்கள்
கொண்டுவந்த சமுக்காளத்தை விரித்து இரண்டு மூன்று பேராய் அமர்ந்து கொண்டு, திருவிழா கடையில் இனிப்பு காராச்சூவை கொறிக்க தொடங்கினோம்.
தைய தைய தையா பாடலில் தொடங்கி, ஒத்த ரூபாயும் தாரேன், ஒரு சாந்து பொட்டும் சந்தன பொட்டும் என பத்து பாடல்களை கடந்து வாரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியில என பாடல் முடிந்தது , அபோது நான் ஆழ்ந்த நித்திரையில் இருந்தேன், சுகந்தியும்தான் .
பாட்டும் கூத்துமாக இருக்கும் அந்த திருவிழாக்களின் இரவில் வரும் தூக்கம்தான் வாழ்வின் சிறந்த தூக்கம் என்பேன்!.
1 comment
[…] கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் &#… […]