பள்ளி மாணவிகளை சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்ற ஆசிரியை 3 மாத கைக்குழந்தையோடு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர் நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக, ஆசிரியை சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார். இதே பள்ளியில் பயின்று தற்போது ஆசிரியையாக பணியாற்றி வரும் சுஷ்மிதா, பள்ளி மாணவிகளை சிவசங்கர் பாபாவிற்கு விருந்தாக்கியுள்ளார். அதிலும் குறிப்பாக எளிய குடும்பத்தை சேர்ந்த பள்ளி மாணவிகளை குறிவைத்து, அவர்களை சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியை சுஷ்மிதாவை, செங்கல்பட்டு கூடுதல் அமர்வு மகிளா நீதிபதி சங்கீதா இல்லத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சுஷ்மிதாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கினார். இதனால் அவர் தமது 3 மாத ஆண் குழந்தையோடு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையில், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை வைத்தே 10 அல்லது அதற்கு கீழ் படிக்கக்கூடிய மாணவிகளை அழைத்து வரச்சொல்லி, அந்த மாணவிகளிடம் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.