ஆபாசமாக பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட வழக்கில் கைதான பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூ-டியூப் சேனல் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்து, பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி வந்தார் மதன். இந்த நிலையில் மதன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், மதனின் வங்கிக் கணக்குகளை முடக்கி, அவரின் சொகுசு கார்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே தனக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை என கோரி மதன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அதில் விசாரணை முழுமையாக முடிவடையாததால், தற்போது மதனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றும் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது’ என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி, மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.