தெலங்கானாவில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாடு, தெலங்கானா மாநிலத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தெலங்கானாவின் பள்ளி,கல்லூரி திறப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில அரசின் அறிவிப்பிற்கு நீதிபதிகள் தடை விதித்துள்ளனர்.
அதேசமயம் தமிழகத்தில் கல்வி நிலையங்கள் திறப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் பல்துறை நிபுணர்களோடு ஆலோசித்த பிறகும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு முடிவெடுத்ததாகவும், மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.