பாலியல் வீடியோ விவகாரத்தில் முன்னாள் பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவனுக்கு ஆதரவாக சீமான் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன்இடம் பெற்றதாக பாலியல் சர்ச்சைக்குள்ளான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை பாஜகவைச் சேர்ந்த யூ-ட்யூபர் மதன் வெளிச்சத்துக்கு கொண்டு வர பல்வேறு தரப்பில் இருந்தும் கே.டி. ராகவனுக்கு கண்டனங்கள் குவிந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மதனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை வளசரவாக்கம் பகுதியில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடிலில் ‘ மாயோன் பெருவிழா’ நிகழ்ச்சி நடைபெற்றது .
அங்கு வைக்கப்பட்டிருந்த மாயோன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் கே.டி.ராகவன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார்.சட்டசபைக்குள் ஆபாச படம் பார்ப்பது தவறு என்று சொல்லலாம்.
ஒருவர் தனிப்பட்ட முறையில் அறையில் பேசுவதை படம் பிடிக்கிற அளவு கேடுகெட்ட சமூகமாக மாறி விட்டது, ஒட்டு கேட்பது , பதிவு செய்து வெளியிடுவதால் என்ன சாதிக்க முடியும்.
ஒருவரின் அனுமதி இல்லாமல் ஆடியோ, வீடியோவை படம் பிடிப்பது தவறு. அதை ஏன் பார்க்க வேண்டும், அவரா பார்க்க சொன்னார்? அறைக்குள் நடந்த தனிப்பட்ட விஷயத்தை பதிவு செய்வது சமூக குற்றம். அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டவரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.