உளவு மென்பொருள் அதிக விலை கொண்டது என்றும், அதனை அரசால் மட்டுமே வாங்க முடியும் எனவும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார்.
மென்பொருள் மூலம் தனிமனித ரகசியங்களை பாஜக மக்களை உளவு பார்க்கவில்லை எனில் வேறு யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் உருவாகியுள்ள ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் அலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் சசி தரூர், அனுமதி பெறாது தனிமனித ரகசியங்கள் கண்காணிக்கப்படுகிறது. இதனை மோடி அரசு செய்யவில்லை எனில், உளவு மென்பொருளான பெகாசஸை கட்டவிழ்த்து விட்டது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற ஸ்பைவேரை நாடுகளுக்கு மட்டுமே விற்பனை செய்வதாக எ.எஸ்.ஓ. நிறுவனம் தெரிவித்துள்ளது. மோடி அரசு இதனை மறுக்கிறது. யார் ஏமாற்றுகிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள், கேபினட் அமைச்சர்கள், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் அலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தி வயர் செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது.
ஒட்டுக்கேட்கப்பட்டவர்கள் பட்டியலில் 40 இந்திய ஊடகவியலாளர்கள் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமானது குறிப்பிடத்தக்கது.