மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி இரு மாநில எல்லையான ஓசூரில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய பிரேமலதா, தமிழ்நாடு ஏற்கெனவே வறண்ட பூமியாகக் காட்சியளிக்கிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும்.
தஞ்சையில் விளைவிக்கப்படும் நெல்தான், இந்தியா முழுவதும் உணவுக்குப் பயன்படுகிறது. தஞ்சாவூருக்குத் தண்ணீர் வரவில்லை என்றால் விவசாயம் கேள்விக்குறியாகும் என கூறினார்.
அதே சமயம் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, யார் தடுத்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என சட்டவிரோதமாக பேசி வருகிறார். மாநில எல்லை வரை வந்தவர்கள், கர்நாடகாவுக்கு வர முடியாதா? நமக்குள் பிரிவினை வேண்டாம் என்று கூறிய பிரேமலதா தமிழக மக்கள் காந்தியாக இருக்க வேண்டுமா, சுபாஷ் சந்திர போஸாக இருக்க வேண்டுமா என கர்நாடக அரசே முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.
மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க விடமாட்டோம்.நாம் இனத்தால், ரத்தத்தால், மூச்சுக்காற்றால் ஒன்றுதான். தண்ணீரால் மட்டும் ஏன் பிரிவினை? நமக்குள் பிரிவினை வேண்டாம். காவிரி நமது அன்னை, அதற்காக எதையும் செய்வோம்.மத்திய அரசு கர்நாடகா அரசிடம் பேசி, கர்நாடகா அணை திட்டத்தைக் கைவிட வேண்டும் என அவர் கூறினார்.