பஞ்சாப் மாநிலத்தின் முதன்மை அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வந்த பிரபல வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தேர்தல் வியூக நிபுணராக பல மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் வெற்றிக்கு காரண கர்த்தாவாக விளங்கிய பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலங்களின் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பிரச்சார வியூகம் அமைத்தார்.
இதனால் தமிழகத்தில் திமுகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸூம் அமோக வெற்றி பெற்றது.
இந்த தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாகவும், இனிமேல் குடும்பத்தினருடன் காலத்தைச் செலவிடவுள்ளேன். அதனால் ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் நடத்துவார்கள் என்று பிரசாந்த கிஷோர் தெரிவித்திருந்தார்.
இதனிடையே ஏற்கனவே ஒப்புக்கொண்டு இருந்ததால் அடுத்தாண்டு நடைபெறும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக முதல்வர் அமரீந்தர் சிங்கின் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் தனது தனிப்பட்ட காரணங்களுக்கான அரசியல் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
இதனால் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது. அதேசமயம் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள பிரசாந்த் கிஷோர் பெரிய திட்டத்தோடு களமிறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் ஆளும் மத்திய பாஜக அரசோ ஒரு வருடம் முன்பாகவே நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்கலாம் என்று ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது.
ஒருவேளை இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் பஞ்சாப் தேர்தல்களில் கவனம் செலுத்திக் கொண்டு இருந்தால் தனது பெரிய அளவிலான திட்டம் பலனளிக்காமல் போய்விடும் என்று பிரசாந்த் கிஷோர் ராஜினாமா முடிவை கையில் எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.
எனவே, இப்போது இருந்தே பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை வலுப்படுத்த வேண்டும் என்று பிரசாந்த் கிஷோரை பாஜக மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.