9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்விதத் தேர்வும் இல்லை என தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவித்து உள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஜனவரி மாதத்திற்கு முந்தைய 10 மாதங்கள் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. ஜனவரியில்தான் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறத் தொடங்கின.
இந்த சூழலில் மாணவர்களுக்கு தேர்வுகள் இருக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், சமீபத்திய பேரவைக் கூட்டத் தொடரில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 9 முதல் 11 வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘9 – 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த மாத இறுதிக்குள் தேர்வுகளை நடத்தி மதிப்பெண் பட்டியலை உருவாக்க வேண்டும்’ – என்று தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து தமிழகம் முழுக்க பள்ளி அளவிலான தேர்வுகள் நடைபெற உள்ளன என்ற செய்தி வேகமாகப் பரவியது. இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை விசாரணை நடத்திய நிலையில், அதன் இயக்குநர் கண்ணப்பன் அவர்கள் இன்று விளக்கம் அளித்தார். அதில், தமிழகம் முழுக்க 9-11ஆம் வகுப்புகளுக்கு எந்தத் தேர்வும் நடை பெறாது எனவும், தஞ்சை முதன்மைக் கல்வி அலுவலர் தவறுதலாக வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித்துறையின் இந்த திட்டவட்டமான அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வரவேற்பையும் பெற்றுள்ளது.