இந்தியா போன்ற மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் அறிவியல் தொழில் நுட்பம் என்பது மிகவும் முகியமானதாக உள்ளது , அந்த வகையில் அரிதான லித்தியம் தாது, இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இந்திய அரசு தரப்பில் பிப்ரவரி 9ஆம் தேதி வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் ரெசி (Reasi) மாவட்டத்தில், சலல் ஹைமனா (Salal Haimana) பகுதியில், கிட்டத்தட்ட 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, இந்திய சுரங்கத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஜியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா கூறியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் ஒரு சிறிய லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாகவே லித்தியம் தாது பொருட்களுக்கான தேவை சர்வதேச அளவில் அதிகரித்து வருகின்றது .
காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்ற பல சிக்கல்களில் உலக நாடுகள் நகரும் போது, பல்வேறு மின் சாதனங்கள், மின்சார வாகனங்கள் தீர்வாக வருகின்றன. குறிப்பாக மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில் லித்தியம் தாதுப் பொருள் அவசியமாகிறது.


இந்தியாவுக்கு தேவையான லித்தியம் தாதுப் பொருள் ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து வருகிறது.
தற்போது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் லித்தியம் இருப்புகளால், இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை 2030-ம் ஆண்டுக்குள் சுமார் 30 சதவீதம் அதிகரிக்க முடியும் என கூறப்படுகின்றது.
2050ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் காலநிலை மாற்ற இலக்குகளை அடைய, லித்தியம் போன்ற அரிதான தாதுப் பொருட்கள் உற்பத்தி, தற்போது இருப்பதை விட சுமார் 500 சதவீதம் அதிகரிக்கப்பட வேண்டும் என உலக வங்கி கூறியிருந்தது.
சரி இந்தியாவுக்கு இத்தனை பெரிய லித்தியம் இருப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் பொதுவாகவே லித்தியம் போன்ற அரிதான தாது பொருட்களை பூமியிலிருந்து எடுக்கும் போது, மிக அதிக அளவில் மரபுசார் எரிபொருட்கள் பயன்படுத்தப்படுமாம்.


இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு கணிசமாக அதிகரிக்கும் என பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மிக முக்கியமாக லித்தியம் தாதுப் பொருளை பூமியிலிருந்து எடுக்கும் போது மிக அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுமாம். குறிப்பாக லித்தியம் சுரங்கங்களில் இருந்து அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடு வாயுவும் வளிமண்டலத்தில் கலக்கும்.


சமீபத்தில் கூட, லித்தியம் அதிகம் இருக்கும் அர்ஜென்டினா நாட்டில், அதிக அளவில் லித்தியம் சுரங்கத்திற்கு தண்ணீர் பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் நாட்டு மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்திருப்பதாகவும் உள்ளூர் மக்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் குதித்தனர் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
சூழலையும், மக்களின் அடிப்படைத் தேவைகளையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் ஏற்கனவே எல்லை பிரச்சினையால் பல அவதிகளையும் துயரத்தையும் பெற்று வரும் காஷ்மீர் மக்களுக்கு இந்த லித்தியம் தனிமம் மூலமாக மேலும் பிரச்சினைகளை உருவாக்க கூடாது என்பதே அனைவரது நோக்கம்