பிப்ரவரி 17 ஆம் தேதி 1847 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் மிலன் எனும் ஊரில் சாமுவேல் எடிசன் மற்றும் ஜான்சி மேத்யூஸ் ஆகிய இருவருக்கும் 7ஆவது மகனாகப் பிறந்தார் எடிசன். தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தபோது அவருக்கு காது கேட்பதில் பிரச்சனை இருந்தது. அதோடு நான்கு வயது வரைக்கும் அவரால் பேச இயலவில்லை.
பிறகு அவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடுகளால் அவர் எட்டு வயதில்தான் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். ஆனாலும் அவரால் பள்ளி படிப்பை முறையாக தொடர முடியவில்லை. தாமஸ் ஆல்வா எடிசனுக்கு மூளை வளர்ச்சி சரியில்லை எனக் கூறி எடிசனை வகுப்பறைக்குள் இனிமேலும் அனுமதிக்க முடியாது என பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது.
அப்படி பள்ளியால் நிராகரிக்கப்பட்ட எடிசனுக்கு அவரது அம்மா வீட்டிலேயே பாடம் சொல்லி கொடுக்க ஆரம்பித்தார். தன்னுடைய சிறுவயதில் இருந்தே துருதுருவென்று எதாவது செய்துகொண்டே இருக்கும் சிறுவனாக இருந்த தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாய் அளித்த பயிற்சியினால் பத்து வயதிற்குள் நிறைய புத்தங்களைப் படித்தார்.


பன்னிரண்டு வயதில் பெற்றோருக்குச் சிரமம் கொடுக்க கூடாது என எண்ணிய எடிசன் புத்தகங்களுக்கும் ஆராய்ச்சி உபகரணங்களுக்கும் வேண்டிய பணத்தைச் சம்பாதிக்க ரயில் வண்டியில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் ரயிலின் லக்கேஜ் வேனில் தனக்கென்று கொஞ்ச இடம் கேட்டு பெற்று பழைய அச்சு இயந்திரத்தை வைத்து பத்திரிகையைத் தொடங்கினார். உலகத்திலேயே மிகவும் குறைந்த வயதுடைய பத்திரிகை ஆசிரியா் தாமஸ் ஆல்வா எடிசன்தான். மேலும் ரயில் பெட்டியில் தனது ஆராய்ச்சிகளையும் தொடங்கினார்.
தம்முடைய செய்தித்தாளுக்கு அவரே ரிப்போர்ட்டராகவும், செய்திகளை அச்சிடுபவராகவும், விற்பவராகவும் செயல்பட்டார். ஓடும் ரயிலில் ஏறிய போது ஏற்பட்ட தீ விபத்தில் அவருடைய வியாபாரம் தடைப்பட்டது. ஸ்டேஷன் மாஸ்டரின் குழந்தையை ரயில் விபத்திலிருந்து எடிசன் காப்பாற்றியதற்காக அக்குழந்தையின் தந்தை எடிசனுக்கு தந்தி முறையை கற்பித்தார். பின்னர் தமக்குத் தேவையான தந்திக் கருவியை எடிசன் தாமே தயாரித்துக் கொண்டார்.
1887ஆம் ஆண்டு வரை அமிலங்களை ஊற்றித்தான் விளக்கு எரித்துக் கொண்டிருந்தார்கள். அதனை மாற்றி எடிசன் வெப்பத்தை வெளிவிடுகிற மின் விளக்கைக் கண்டுபிடித்துப் பெரும் புகழ் பெற்றார். மின்சார விநியோக மையம் ஒன்றை நியூயார்க் நகரில் ஏற்படுத்தி நுகர்வோருக்கு மின்சாரத்தை விநியோகித்தார். இதன் மூலம் மிகவும் பிரபலமானார்.


தோல்விகளை கடந்தால்தான் வெற்றி. அப்படி பல தோல்விகளை சந்தித்து வெற்றி பெற்றவர்தான் எடிசன். உதாரணத்திற்கு, மின்விளக்கினை கண்டுபிடிக்க நீண்ட நேரம் நீடித்து எரிவதற்கு தகுந்த மின் இழையை எந்த பொருளில் உருவாக்குவது என்பதில் பெரிய சிக்கல் உண்டானது.
கிட்டத்தட்ட 5000 முறை வேறு வேறு பொருள்களால் ஆன மின் இழையை அவர் சோதனைக்கு உட்படுத்தினார். அப்போதும் அவர் ஓயவில்லை, இறுதியாகத்தான் டங்ஸ்டன் இழையை பயன்படுத்தி வெற்றி கண்டார்.
எடிசனின் துரோகம்!
இந்த சமயத்தில் நிக்கோலா டெஸ்லா என்ற ஆராய்ச்சியாளர் எடிசனிடம் வேலைக்குச் சேர்ந்தார். அவரிடம், எடிசன் ஒரு மோட்டரை உருவாக்கச் சொன்னார். அப்படி உருவாக்கினால் ஒரு பெரிய தொகையை பரிசாக தருவதாகச் சொன்னார் எடிசன்.
உற்சாகமான டெஸ்லா, இரவு பகலாக வேலை செய்து அந்த மோட்டரை உருவாக்கினார். அதை பார்த்த எடிசன், டெஸ்லாவை பாராட்டி விட்டு மோட்டரை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். ஏழையான டெஸ்லா தனக்கு பரிசு கிடைக்கும் என எதிர்பார்த்தார்.
எடிசனிடம் இருந்து எந்த பரிசும் வரவில்லை. இறுதியில் எடிசனிடம், அவருடைய வாக்குறுதியை நினைவூட்டினார் டெஸ்லா. அதை கேட்டு சிரித்த எடிசன், அமெரிக்காவில் அப்படித்தான் ஜோக்கடிப்போம், அதை உண்மை என நம்பியிருக்கிறாயே என்று சொல்லி சிரித்தார். கோபமும், வருத்தமும், இயலாமையும் ஒன்று சேர்ந்த டெஸ்லாவை வருத்த, அவர் வேலையை விட்டு நின்று விட்டார்.
வயிற்று பிழைப்பிற்கு அமெரிக்க வீதிகளில் சிறு வேலைகளை செய்து வந்தார், டெஸ்லா. அச்சமயத்தில், நீண்ட தூரம் மின்சாரத்தை கொண்டு செல்ல ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. அன்றைக்கு அமெரிக்காவின் மிகப்பெரிய ஆராய்ச்சியாளர் மற்றும் தொழிலதிபர் எடிசன்.


அவர் தனது விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். அதே நேரத்தில் ஜார்ஜ் வெட்டிங்ஹவுஷ் என்ற தொழிலதிபர் தனது விண்ணப்பத்தையும் சமர்ப்பித்தார். வெட்டிங்ஹவுஷின் விண்ணப்பத்திற்கு மூளையாக இருந்தது டெஸ்லா. டெஸ்லாவின் மேன்மையான அறிவு வெற்றி பெற்றது. ஒப்பந்தம் வெட்டிங்ஹவுஷிற்கு கிடைத்தது.
அன்றைக்கு வரை, குறைகள் இருந்தாலும், எடிசனின் நேர் மின்சாரம் தான் புகழ்பெற்றது. டெஸ்லா எதிர்மின்சாரத்தை உற்பத்தி செய்தார். அதை நீரின் மூலம் உற்பத்தி செய்தார். செய்யப்பட்ட இடம் அமெரிக்க கனடா நாட்டு எல்லையில் உள்ள நயாகரா அருவி.
அங்கிருந்து ஐம்பது மைல் தொலைவில் உள்ள பஃபல்லோ (Buffalo) நகருக்கு மின்சாரத்தை கொண்டு சென்று சாதனை செய்தார் டெஸ்லா. அந்த தொழில்நுட்பத்தால் தான் இன்றைக்கும் உலகில் பல்வேறு இடங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.
டெஸ்லாவின் எதிர்மின்சாரம் புகழ்பெற ஆரம்பிக்கவும், எடிசனின் நேர்மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில் நஷ்டமடைய ஆரம்பித்தது. எடிசனுக்கு பல அமெரிக்க அரசியல்வாதிகள் பழக்கம்.
ஆகவே மரணதண்டனை கைதிகளுக்கு மின்சார சேர்கள் மூலம் தண்டனை நிறைவேற்றலாம் என்ற யோசனையை சொன்னார். அரசும் எடிசனால் தூண்டிவிடப்பட்டவர்கள் சொன்ன யோசனையை ஏற்றுக்கொண்டது. அந்த மின்சார நாற்காலியில் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் டெஸ்லாவின் எதிர் மின்சாரம்.
அரசியல்வாதிகள் மூலம் எடிசன் மக்களுக்கு சொன்ன தகவல், எதிர்மின்சாரம் பயன்படுத்தினால் மரணம் ஏற்படும் அது தவிர தன்னுடைய வேலை ஆட்கள் மூலம், தெருநாய்கள் பூனைகள் போன்ற விலங்குகளுக்கு எதிர் மின்சாரம் பாய்ச்சி கொல்லச் செய்தார் எடிசன்.
அதை பார்க்கும் மக்கள் டெஸ்லாவின் மின்சாரத்தை பயன்படுத்த மாட்டார்கள் என்பது எடிசனின் எண்ணம். ஆனால், டெஸ்லாவின் எதிர்மின்சாரம் புகழ்பெற்று உலகெங்கும் இன்றுவரை பயன்படுத்தப்படுகிறது.


மனித குலத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிய டெஸ்லாவின் சிலை, அவர் தனது கண்டுபிடிப்பை நிகழ்த்திய நயாகரா அருவியில் உள்ளது.
பல கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர் எடிசன் ஆனால் அவர் டெஸ்ட்லாவுக்கு இழைத்த அநீதி அவர் உருவாக்கிய மின்சார விளக்கின் வெளிச்சத்தில் அப்போது காணமல் போனது இப்போதும் நயாகரா செல்பவர்கள் அந்த சிலைக்கு அஞ்சலி செலுத்துவது, பல சூழ்ச்சிகளையும் துரோகங்களையும் வென்ற அந்த ஆராய்ச்சியாளனுக்கு செய்யும் மரியாதையாக பார்க்கப்படுகிறது.
எடிசன் எப்போதெல்லாம் நினைவுகூரப்படுகிறாரோ, அப்போதெல்லாம் டெஸ்லாவும் நினைவுபடுத்தப்பட வேண்டியவராகிறார்!.