வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைக்கு உரிய இடங்களைத் தவிர மற்ற இடங்களான உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் போன்றவை மூடப்பட்டன.
அந்த வகையில் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், பூங்கா மருத்துவர்கள் உள்ளிட்டோர் விலங்குகளை பரிசோதித்தனர்.
பூங்காவில் உள்ள சிறுத்தை, புலி சிங்கம் உள்பட விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 9 சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் வண்டலூர் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அங்கு ஆய்வு நடத்தினார்.
அப்போது கொரோனா பாதித்த சிங்கங்களுக்கு சிகிச்சை வழங்குவது மற்றும் பிற உயிரினங்களை தனிமைப்படுத்துதல் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் கேட்டறிந்தார்.
- மூவேந்தன்