ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தாலிபான்களுக்கு புதிய தலைவலியாக தீவிரவாத அமைப்பு ஒன்று அமைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகள் விலக்கி கொல்லப்பட்டதையடுத்து அங்கு தலிபான்கள் முழுமையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனால் நாட்டு மக்கள் உயிர் வாழ பயந்து வேறு நாடுகளில் தஞ்சம் அடைய விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.
இதனைப் பயன்படுத்தி தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாகி உள்ளனர்.உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்திற்குன் ஐஎஸ்ஐஎஸ்-கே என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
அதேசமயம் இந்த தாக்குதல் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு தீவிரவாத அமைப்பின் மீது மற்றொரு தீவிரவாத அமைப்பு பழிபோடும் விளையாட்டை தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வானொலிக்கு தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் பேட்டியளித்துள்ளார். அதில் எங்களது படையினர் தங்கியிருக்கும் இடத்திலும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. தாலிபான் குழுவினரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து காபூல் விமான நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.
அங்கு அவர்களுக்கும் ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பால் ஆபத்து உள்ளதாகவும் ஜபியுல்லா கூறியுள்ளார்.
உலகளாவிய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சுமார் 20 வகையான பிரிவுகள் உள்ளன. அவற்றில் மிகவும் ஆபத்தான பிரிவுதான் ‘ஐஎஸ்ஐஎஸ்-கே’ எனப்படும் ‘கோராசன்’ பிரிவு என்பது குறிப்பிட்டத்தக்கது.
இவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற நினைக்கும் தாலிபான் தீவிரவாதிகளை மூளைச்சலவை செய்து தங்கள் இயக்கத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.