தனிமையில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லும் ரோபோ ஒன்று இந்தோனேசியாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனிமை பலருக்கும் வாழ்வின் கொடுமை என்றே சொல்லலாம். சிலநேரம் பேசக்கூட துணையில்லாமல் தனிமையில் வாடி விபரீதமான முடிவுகளை தேடி கொள்பவர்களும் உண்டு.
இதனிடையே கடந்த ஆண்டு முதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப் படுத்தப் படுவதால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
அவர்களுக்கு உதவும் வகையில் இந்தோனேசியாவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் இருக்கும் மின்சாதனப் பொருட்களை சேர்த்து இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது, வீடுகளுக்கு வெளியே கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளில் இந்த ரோபோவை ஈடுபடுத்தியுள்ளனர்.
பொருட்களை வழங்கிய பின், தனிமையில் உள்ளவர்களுக்கு ரோபோ ஆறுதல் வார்த்தைகளையும் கூறுகிறது.
டெல்டா ரோபோட் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ மூலம், பல்வேறு வகையில் பலன்களை பெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தோனேசியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.