ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசை தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தாலிபான்கள் 20 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து அங்கு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பணியில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையிலான அரசில் இடம் பெற்று உள்ளவர்கள் குறித்த விபரங்களை தாலிபான் அமைப்பின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் வெளியிட்டுள்ளார்.
அதன்படி பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்தும், துணை பிரதமராக முல்லா அப்துல் கனி பரதர் நியமிக்கப்பட்டு உள்ளார். அதேபோல் வெளியுறவுத் துறை அமைச்சராக அமீர் கான் முத்தாகியும், துணை வெளியுறவுத்துறை அமைச்சராக அப்பாஸ் ஸ்டானிக்ஜாயும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ராணுவ அமைச்சராக முல்லா யாகூப்புக்கும், ஆட்சி அதிகாரத்தில் முக்கிய முடிவு எடுக்க, முல்லா முகமது ஹசன் அகுந்திற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களின் பதவியேற்பு விழா எப்போது நடைபெறும், இவா்கள் எவ்வளவு காலம் பொறுப்பில் இருப்பாா்கள் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தேர்வு செய்யப்பட்ட அனைவரும் ஐநா சபையால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.