மகாத்மா காந்தியின் உண்மை, அகிம்சை கோட்பாடுகள்தாம் இந்தியாவை சுதந்திரத்தை நோக்கி வழிநடத்திச் சென்றன என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் புகழாரம் சூட்டியுள்ளாா்.
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஜோ பைடன் தனது அறிக்கையில்:
மிகப்பெரிய சவால்கள் உள்ள இந்த காலத்தில் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
கடந்த 1947-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் உண்மை, அகிம்சை கோட்பாடுகளின் வழியில் சுதந்திரத்தை நோக்கிய மிக நீண்ட பயணத்தில் இந்தியா வெற்றிகண்டது.
ஜனநாயக வழியில் இந்திய மக்கள் புரிந்த சாதனை உலகுக்கே முன்னுதாரணமாக இருப்பதோடு, இரு நாடுகளிடையேயான சிறப்பான உறவுக்கும் அடித்தளமிட்டது.
கடந்த பல ஆண்டுகளாக, இரு நாட்டு மக்களிடையேயான நல்லுறவு மற்றும் 40 லட்சத்துக்கும் அதிகமான இந்திய-அமெரிக்கா்களின் துடிப்பான பங்களிப்பானது இரு நாடுகளின் உறவை வலுவானதாகவும், நிலைத்தன்மையுடையதாகவும் மாற்றியிருப்பதாக கூறினார்.
இரு நாடுகளிடையேயான இந்த நல்லுறவு வரும் நாள்களில் மேலும் மலர வாழ்த்துகிறேன் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளாா்.