தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றது இதில் பேரவை விதி 110-இன் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டு பலரது வரவேற்பையும் பெற்று வருகின்றார் மு.க ஸ்டாலின் .
அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்பு பல்வேறு தரப்பினரிடையேயும் வரவேற்பை பெற்றது.
அதாவது சமூக சீர்த்திருத்தவாதி பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதியை இனி சமூகநீதி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடும் என அறிவித்தார்.
மேலும், பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும். சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் உறுதிமொழி எடுப்பார்கள் எனக் கூறினார்.
இதற்கு அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. குறிப்பாக கடவுள் நம்பிக்கை கொண்ட கட்சியாக பாஜக இருந்தாலும் சமூக நீதிக்காக இதனை வரவேற்பதாக அக்கட்சியின் சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் சத்யராஜ் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டி வீடியோ ஒன்று வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில், ’’பிறப்பால் யாரும் உயர்ந்தவரும் இல்லை; தாழ்ந்தவரும் இல்லை என்று அறப்பால் தந்த ஐய்யாவின் கருத்தால் கவரப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புதல்வருக்கு, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாள் என்று அறிவித்த எங்கள் பெருமைமிகு முதல்வருக்கு நன்றிகள் என்று கூறியுள்ள சத்யராஜ்.
‘’திராவிடியன் ஸ்டிக் பிடித்து நடந்த எங்கள் திராவிடியன் ஸ்டாக் ஸ்டாலின் அவர்கள் வாரணத்தின் நான்கு கால்களை பேரரங்கம் அதிர முழங்கினார். முழக்கங்கள் தொடர்கின்றன முயற்சிகள் வெல்கின்றன ’’என்று பேசியுள்ளார்.