கங்கைகொண்ட சோழபுர அகழாய்வின்போது முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, அரண்மனையின் இரண்டாம் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக தொல்லியல் துறை மூலம், 2020-21 ஆண்டிற்கான அகழாய்வு பணிகள்கடந்த ஆட்சியில் தொடங்கின.
அதன்படி, தமிழகம் முழுதும் கீழடி, ஆதிச்சநல்லுார், கங்கைகொண்டசோழபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அகழாய்வு பணிகள் நடந்தன.
அந்த வகையில்,அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகில் அமைந்துள்ள மாளிகைமேடு என்னும் பகுதியில், கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
கொரோனா இரண்டாம் அலை பரவல்காரணமாக அகழாய்வுப் பணிகள் கடந்த மாதம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது, ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால் கடந்த, 14ம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கியது.
ஏற்கனவேமாளிகை மேட்டில்அகழாய்வு நடத்திய போது பழங்கால ஓடுகள்,, இரும்பிலான ஆணிகள், சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள் கிடைத்து அவற்றை தொல்லியல் துறையினரால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
அது மட்டும் அல்லாது முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவர் கடந்த மாதம் கண்டறியப்பட்டது.
தற்போது மீண்டும் அகழாய்வுப் பணிகள் துவங்கிய நிலையில் அரண்மனையின் இரண்டாவது பாகமும் கண்டறியப்பட்டுள்ளது.
முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் மாளிகைமேடு என்னும் பகுதியில் தான் அரண்மனை இருந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.
அந்த வகையில் தற்போது அரண்மனையின் இரண்டாவது பாகம் கிடைத்திருப்பதுசோழர்களின் வரலாற்றினை இன்னும் அறிய உதவும்என்று தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.