மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார்.
கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் மரங்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் காகிதமில்லாத இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இம்மாதிரியான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறை.
இந்த நிலையில்திமுக அரசின் முதல் பட்ஜெட் உரை தொடங்குவதற்கு முன்பே அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைத் தலைவர் அப்பாவு அமருமாறு அறிவுறுத்தியும் அவர்கள் கேட்காமல் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்தவுடன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி, தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை ரூ.5 குறைக்கப்படும் என அறிவித்த நிலையில் தற்போது ரூ.3 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. இது ஏமாற்றமளிப்பதாக கூறினார்.
தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் இருப்பதாக கூறியுள்ள கமல்ஹாசன்
மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது என்று விமர்சித்துள்ளார்.
கடந்த 9ஆம் தேதி நிதியமைச்சரால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையை மஞ்ச கடுதாசி என காட்டமாக கமல்ஹாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.