பருவநிலை மாற்றத்தால் விரைவில் வெப்பநிலை உயரும் என ஐக்கிய நாடுகளின் அரசுகளுக்கிடையிலான குழு சமர்பித்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் அரசுகளுக்கிடையிலான காலநிலை மாற்றங்களுக்கான இந்த குழுவில் இந்தியா உட்பட மொத்தம் 195 நாடுகளின் உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழு தனது ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
அதில், பருவநிலை மாற்றம் என்பது பூமியின் அனைத்து பகுதிகளையும் அடைந்து விட்டது என்றும் , இது மனிதர்களின் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றியமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக வெப்பமயமாதல் அதிகரிக்கும் போது தான் அதன் தாக்கங்கள் தீவிரமடையும். அதன்படி 2050 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் புவியின் வெப்பம் 1.5 முதல் 2 டிகிரி செல்சியஸ் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது உள்ள சூழலில் 2030 ஆண்டில் இருந்தே புவி வெப்பமடைதல் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பெரும் முயற்சி எடுத்து பருவநிலையை காப்பாற்றும் முயற்சிகளை மேற்கொண்டால், 2100 ஆம் ஆண்டு இந்த 1.5 சதவீத வெப்பநிலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக தெற்காசியாவில் அதிக வெப்பநிலை, இயற்கை பேரிடர்கள், காட்டுத்தீ, புயல், வெள்ளம் போன்றவை சர்வ சாதாரணமாக ஏற்படும் என்றும், இமயமலையை ஒட்டிய மாநிலங்களில் பனிமலை வெடிப்புகள், பனிக்கட்டி சரிவுகள் அதிகம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடல்மட்ட அளவு குறைந்தபட்ச அளவில் 55 செமீ ஆகவும், அதிகபட்ச அளவில் 76 செமீ ஆகவும் உயரக் கூடும் என்றும், சென்னை, மும்பை போன்ற கடலோர நகரங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ் இந்த அறிக்கையை, “மனிதகுலத்திற்கான கோட் ரெட் குறியீடு” என்று குறிப்பிட்டுள்ளார்.