மக்கள் நீதிமய்யம் கட்சி முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக இருந்தவர் மகேந்திரன். கமல் கட்சி துவங்கியதிலிருந்து அவருடன் நெருக்கமாகவும், முக்கியப் பொறுப்பிலும் இருந்தார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சிங்காநல்லுார் தொகுதியில் போட்டியிட்டு, 36 ஆயிரத்து 855 ஓட்டுகள் பெற்றார்.
ஆனால், தேர்தல் முடிவுகள் வந்த பின், கமலுக்கும், மகேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து , மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மகேந்திரன் விலகினார்.
இந்த நிலையில் மகேந்திரன் தி.மு.க.,வில் இணைவதாக தகவல் வெளியான நிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
மகேந்திரன் திமுகவில் இணைந்தது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது . கொங்கு மண்டலத்தில் தி.மு.க., எதிர்பார்த்த வெற்றியை பெறாதது வருத்தமளிக்கிறது.
லேட்டானாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் கிடைத்துள்ளார். முன்பே வந்திருந்தால் தி.மு.க., வெற்றி பெற்றிருக்கும். தற்போது கட்சியில் இணைந்துள்ள மகேந்திரனையும், அவரது ஆதரவாளர்களையும் வரவேற்பதாக கூறியுள்ளார்.