கலைஞர் பெயரில் நூலகம் கட்டப்படும் இடம் குறித்து தவறாக கருத்துக்களை பரப்பி வருவதாகவும், ஆதாரம் இருந்தால், அந்த இடத்தை மாற்ற அரசு தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத் துறை மற்றும் உணவு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் போது பேசிய, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, மதுரையில் உள்ள பென்னி குவிக் இல்லத்தை மாற்றி, கலைஞர் பெயரில் நூலகம் அமைக்க உள்ளதாக தகவல் வருவதாகக் கூறினார்.
அப்போது பொங்கி எழுந்த நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அந்த இல்லம் பென்னி குவிக் இல்லம் இல்லை என்றும், தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அது பென்னி குவிக் இல்லம் என்பதற்கான ஆதாரம் இருந்தால், நிச்சயம் இடத்தை மாற்ற அரசு தயாராக உள்ளதாக விளக்கம் அளித்தார்.