இந்திய நாட்டிற்கு என்று தனியாக தேசியமொழி எதுவும் கிடையாது என்று மத்திய அரசின் அலுவல் மொழிகள் துறை தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, யானைகள் மீது ரயில்கள் மோதல் தொடர்பாக ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு சில வட மாநிலங்களின் ரயில்வே கோட்ட அதிகாரிகள் இந்தியில் பதில் அளித்திருந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மத்திய அரசின் அலுவல் மொழிகள் துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்திய மொழிகள் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதற்கு அளிக்கப்பட்ட பதிலில், இந்தியாவிற்கு என தேசிய மொழி எதுவும் கிடையாது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினால், எந்த மொழியில் பதிலளிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப் படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு அதிகாரி இந்தியில் பதிலளித்தால் அவருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது என்றும், அலுவல்மொழி விதிகள் 1976 தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியாவின் தேசிய மொழி இந்திதான் என்ற தவறான கருத்தும் பொதுமக்களிடையே தொடர்ந்து பரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.