சண்டே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னாடியே இவர் தான்ப்பா இன்னிக்கு எலிமினேஷன்னு தகவல் பரவுறது வாடிக்கையான விஷயம்… அதே மாதிரி தான் இந்த சண்டே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னாடியே அபிஷேக் எலிமினேட் ஆயிட்டாருன்னு தகவல் பரவ… பலர் இந்த தகவலுக்கு ’அப்பாடா போயிட்டானா’… அப்படின்னு சந்தோஷப்பட்டாலும்… ஒரு சிலர் ’அப்படி எல்லாம் இருக்காது, அவன் தாங்க நல்லா கன்டெண்ட் குடுத்துட்டு இருந்தான், அவனைப்போய் பிக் பாஸ் தூக்கிடுவாரா?’ என்றும் கேள்வி எழுப்பினர்.
சரி பார்த்தே தெரிஞ்சிப்போமே என்று, இந்தியா பாகிஸ்தான் மேட்சை பார்கிறதா பிக் பாஸ் பார்கிறதான்னு குழம்பி இருந்தவங்களுக்கு, கிரிக்கெட் மேட்ச் வழிவிட்டதால் அனைவரும் பிக் பாஸ் பக்கம் வந்தனர். ’அய்யோ ஆமா’ என்பது போல் அபிஷேக்தான் எலிமினேட் செய்யப்பட்டார்.
இறுதி எலிமினேஷனில் அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு இருக்க, அபிஷேக்கின் கார்ட்டைக் கமல் காட்டியதும், ஹவுஸ்மேட்ஸ் அனைவரின் முகமும் மாறியது. இதில் நாணயம் வைத்திருக்கும் அனைவரும் வந்து ’என் காயின் எடுத்துக்கோ’ என்று அபிஷேக்கை காப்பாற்ற முற்பட்டதில், இந்த முடிவை யாருமே சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை என்று தெரிகிறது. ஆனால் இந்த ரெண்டு வார நட்புக்காக பிரியங்கா அழுது ஒப்பாரி வைத்தது கொஞ்சம் அதிகம்தான்.
மற்றவர்களிடம் அபிஷேக் பேசிக் கொண்டிருக்கும்போதே, வெளியே செல்லும் கதவு திறந்ததைப் பார்க்கும் போது… பிக்பாஸ், ‘கிளம்பு காத்து வரட்டும்…’ என்று சொன்னதைப் போல இருந்தது.
என்ன பொசுக்குன்னு இப்படி ஆயிடுச்சு என்றுதான் இருந்தது சண்டே எபிசோடு. வெளியே வந்த அபிஷேக்கிடம் ’இவ்ளோ சீக்கிரம் வருவீங்கன்னு எதிர்பார்த்தீங்களா?’ என்று கேட்டதற்கு…. ’இல்ல சார், டாப் 5 ல இருப்பேன்னு நினைச்சேன்’னு சொன்ன அபிஷேக்கை பார்க்க பாவமாகவும் இருந்தது. இறுதியில் ’திரைப்படங்களுக்கு நீங்கள் கொடுக்கும் விமர்சனங்கள் போல், உங்கள் மீது வரும் விமர்சனங்களையும் கண்ணாடிபோல் திருப்பி வைத்து பாருங்கள்’ என்று கமல் கூறியது நல்ல அறிவுரை.
– சே.கஸ்தூரிபாய்