தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

SHARE

தமிழின் மிக மூத்த இலக்கியங்களான ‘சங்க இலக்கிய’ங்களில் பதிவு செய்யப்பட்ட காதல் குறித்த செய்திகள், தமிழ்ச் சமுதாயம் காதல் மீது கொண்டிருந்த புரிதலையும்  மரியாதையையும் காட்டுகின்றன.

சங்க இலக்கியம் முழுக்க காதல் பாடல்கள் செறிந்து உள்ளன. சங்க இலக்கியத்தின் ஒரு பாடலிலும் ஒரு ஆண் அல்லது பெண்ணின் வாழ்க்கைத் துணையை சமுதாயம் தீர்மானித்ததாக குறிப்புகள் இல்லை. சங்க காலச் சமூகம் மனிதர்களின் காதலைப் போற்றும் மகத்தான சமூகமாக இருந்துள்ளது.

முன்னறிமுகம் எதுவும் இல்லாத ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்த நொடியில் காதலில் வீழந்ததை, ”அவர்களின் அன்பு மனங்கள் செம்மண்ணில் ஓடிய நீர் தானும் செந்நிறம் அடைவது போல இரண்டறக் கலந்தன” – என்று சங்க இலக்கியம் கூறுகின்றது. ‘செம்புலப் பெயல் நீர்போல’ என்ற இந்த உவமைக்காகவே அந்தப் பாடலைப் பாடிய புலவர் ’செம்புலப் பெயல் நீரார்’ – என்றே குறிக்கவும்பட்டுள்ளார்.

சாதியோ, பொருளாதாரமோ, ஜாதகம் போன்ற நம்பிக்கைகளோ சங்க கால காதலுக்கு இடையூறாக இல்லை. மேலும், சங்க இலக்கியம் முழுக்க புறமண முறை எனப்படும் பிற குடியில் திருமணம் செய்யும் வழக்கமே காணப்படுகின்றது. சங்க காலத் தமிழகத்தில் வைதீக சாதிய முறை மற்றும் அகமண முறை ஆகியவை காணப்படவில்லை. அத்தோடு ஆணவப் படுகொலை போன்ற அவலங்களும் சங்க காலத் தமிழகத்தில் காணப்படவில்லை.

குடும்பத்தினர் தனது காதலை ஏற்காதபோது, ஒரு பெண் தனது வீட்டில் இருந்து வெளியேறி காதலனுடன் செல்வதை சங்க இலக்கியங்கள் ‘உடன் போக்கு’ – என்று கூறுகின்றன. உடன் போக்கு மேற்கொண்ட தனது மகளையும் மருமகனையும் மீண்டும் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ளச் சொல்லும்தாயை சங்க இலக்கியங்கள் ‘நற்றாய் (நல்லதாய்)’ – என்றே குறிப்பிடுகின்றன.

தனது காதலுக்காக நாணம் துறந்து, தனது எண்ணத்தை ஊர்ப் பொதுவில் அறிவித்த ‘மடல் ஏறுதல்’ – என்ற வழக்கம் தமிழ்ச் சமுதாயத்திற்கு மட்டுமே உரியது. 

காதல் இணையர் இருவருக்கு இடையில் வரும் சிறுகோபத்தை ‘ஊடல்’ – என்று சங்க இலக்கியங்கள் பெயரிடுகின்றன. திருக்குறளிலும் ஊடல் குறித்த சிறப்பான குறட்பாக்கள் உண்டு. இந்த ஊடல் என்ற சொல்லும் தமிழுக்கே உரித்தான ஒன்றாகும். சமஸ்கிருதம் இதை ‘பிரணய கலவரம்’ – என்று ஒரு போர் போலக் கூறுகின்றது. ஆங்கிலத்தில் உள்ள காதலர் சண்டை (lovers quarrel) – என்ற சொல்லாட்சியும் இதனை ஒரு சண்டையாகவே கூறுகின்றது. ஆனால் ஊடல் ஒரு சண்டையல்ல, அது காதலின் ஒரு வடிவம் என்பதை தமிழ் மொழி மட்டுமே மனதில் கொண்டு உள்ளது.

சங்ககாலத் தமிழ்ச் சமுதாயம் காதலுடன் கலந்த காமத்தை மறுக்கவில்லை, ஆனால் அதே சமயம் கண்ணியத்துக்கு மரியாதை அளித்தது. உதாரணமாக கலித்தொகையின் குறிஞ்சிக் கலியிலே கபிலர் பாடிய ”கய மலர் உண்கண்ணாய் காணாய்” என்ற பாடலைக் கூறலாம்.

முற்றிய தானியங்களை விலங்குகளும் பறவைகளும் சேதப்படுத்தி விடாமல் பாதுகாப்பதற்கு பகலில் இளம் பெண்களும் இரவிலே இளைஞர்களும் வயல்களிலே காவல் இருப்பது குறவர்கள் வழக்கம். அப்படிக் காவலுக்கு போன குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த குறப்பெண் ஒருத்தி தன் காதல் குறித்து தோழியிடம் கூறுகிறாள், “நான் வயலில் இருக்கும் போதெல்லாம் வில்லும் அம்பும் ஏந்திய இளைஞன் ஒருவன் தப்பி ஓடிய மானின் காலடியைத் தேடிக் கொண்டு வருவது போல நடித்துக் கொண்டு தினமும் வருவான், வந்து என்னையே பார்த்துக் கொண்டு நிற்பான். ஆனால் எதுவுமே பேசாமல் போய் விடுவான். இரவிலே நான் படுக்கையில் இருக்கும்போது இவன் ஏன் வருகின்றான் என்று நினைத்துப் பார்ப்பேன். அவனின் பார்வையில் என்மேல் அவனுக்கு விருப்பம் உள்ளது போல தோன்றியது. அது பற்றி அவனோடு பேச நினைத்தேன். ஆனால் நான் பெண். முன்பின் தெரியாதவனோடு எப்படி நானே பேசத் தொடங்குவது என்று நினைத்துப் பேசாமல் இருந்தேன். சிறிது காலத்தில் அவன் வருகையை எதிர்பார்த்து என் மனமும் ஏங்கத் தொடங்கியது. 

என் மனத்திலே அவன் இப்படி ஒரு ஆசையை வளர்த்து விட்டு பேசாமலே போய்விடுவானோ என்று தவித்தேன். இந்நிலையில் ஒருநாள் அவன் வந்தான். அப்போது நான் எங்கள் வயலிலே உள்ள ஒரு ஊஞ்சலில் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தேன். வந்தவனிடம் என்னைக் கொஞ்சம் விரைவாக ஆட்டி விடுகிறீர்களா என்று கேட்டேன். அவனும் அதற்குச் சம்மதித்து விருப்பத்தோடு என்னை விரைவாக ஆட்டிவிட்டான். நான் வெட்கத்தையும் மறந்து ஏதோ கை வழுக்கி விழுபவள் போல அவனின் மார்பிலே சாய்ந்து விழுந்து விட்டேன். நான் நினைத்தது போலவே அவனும் என் கை வழுக்கிவிட்டதாக நினைத்து ‘ஓ…’ என்று தன் உதட்டினைக் கடித்து என்னைக் கீழே விழ விடாமல் பக்குவமாக அணைத்துக் கொண்டான். நான் பயத்தினால் மயங்கியவள் போல அவன் நெஞ்சிலேயே கிடந்தேன். பின்பு அது தப்பு என்று மனம் சொல்ல மயக்கம் தீர்ந்தவள் போல துள்ளி எழுந்தேன். நான் மயங்கியவள் போலக் கிடந்த நேரத்தில் அவன் என்னை என்ன வேண்டும் என்றாலும் செய்திருக்கலாம். நானும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தேன். ஆனால் அவன் மிகவும் பண்பு மிக்கவனாக நடந்து கொண்டான். கவனமாகப் போய்வா என்று சொல்லி விட்டு நான் நடந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றான். அவன் விருப்புவது என் காதலை என் தேகத்தை அல்ல என்று உணர்ந்து நான் மெய்சிலிர்த்தேன் – என்கிறது அந்தப் பாடல்.

இன்று அதே குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள்தான் நாகரிகக் குறைவானவர்களாக, திருடர்களாக நினைக்கப்படுகிறார்கள் என்பது தமிழ்ச் சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய இழுக்கு?.

ஜெர்மானிய பேராசிரியர் ஜான் கொமால்டியா உலகின் மிகச் சிறந்த காதல் இலக்கியங்கள் பற்றி பேசும்போது,

தமிழின் ஐவகை நிலங்களில் ஒன்று பாலை. அதுதான் வாழவே கடினமான நிலம். அந்த பாலை நிலத்தில் ஏழ்மையில் உயிர்த்து இருக்கும் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே உடை மட்டும் இருக்கும். அவ்வளவு வறுமை. அந்த வறுமையிலும் இருவருக்கும் நடுவே இருக்கும் காதலை ‘பாலைக் கலி’ – எனும் தமிழக சங்க இலக்கியம் பதிவு செய்கிறது – என்பார். 

மனிதர் காதல் போக, விலங்குகளின் காதல் பற்றிய செய்திகளும் சங்க இலக்கியங்களில் உண்டு. காட்டுயிர்கள் வெயில் காலங்களில் நீர் அருந்தச் செல்லும்போது குறைவான நீர் இருந்தால், தங்கள் இணை அல்லது குட்டிக்கே முன்னுரிமை கொடுக்கும். வெயில் கொடுமை கூட அவற்றின் காதலை வற்ற வைக்காது.

சேரமான் பெருங்கடுங்கோ என்ற புலவர் கலித்தொகையில், தலைவனின் பிரிவைத் தாங்காத தலைவியைத் தோழி தேற்றுவதாக ஒரு பாடல் எழுதி இருப்பார். அதில், 

“ஆண், பெண், குட்டி ஆகிய 3 யானைகள் உள்ள சிறு கூட்டம், வெயில் காலத்தில்  காட்டில் நீரைத் தேடும்போது, கொஞ்சம் நீரே இருக்கும் குட்டையையே பெரும்பாலும் கண்டுபிடிக்கும். இரண்டும் முதலில் குட்டியை நீர் அருந்தவிடும். அந்தக் குட்டி குடிக்கத் தெரியாமல் குடித்து குட்டையைக் கலக்கிவிடும். பிறகு பெண்யானை மீதமிருக்கும் கலங்கிய நீரைக் குடிக்கும். இரண்டும் குடித்த பின்னர் நீர் மீதமிருந்தால் ஆண் யானை அப்போதுதான் குடிக்கும். இதைக் கட்டாயம் தலைவன் காண்பான், அப்போது உன் நினைவு அவனுக்கு வரும்” – என்று தோழி கூறுவதாக புலவர் எழுதி உள்ளார்.

கி.பி.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, 18 கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றான ஐந்திணை ஐம்பது – என்ற நூலில், ‘சுனைவாய்ச் சிறுநீரை’ என்ர பாடலில் இன்னொரு காட்டுயிர்க் காதல் காட்சி உள்ளது. அதில்,

ஒரு கொடுங்கோடைக் காலத்தில் இரண்டு காதல் மான்கள் தண்ணீர் தேடி அலைகின்றன. கடைசியில் ஒரு மானுக்குக் கூட போதாது என்ற அளவுடைய சிறிய சுனைநீரைப் பார்க்கின்றன. ஆண் மான் குடிக்கட்டும் என பெண்மானும், பெண்மான் குடிக்கட்டும் என ஆண்மானும் கருதி நீரில் வாய் வைக்காமல் உள்ளன. பிறகு இருவரும் குடிப்பது என்று முடிவெடுத்து ஒன்றாக நீரில் வாய் வைக்கின்றன. இரண்டு மான்கள் வாய் வைத்தாலும், அந்த நீரில் துளி கூடக் குறையவில்லை. ஏனென்றால் மான் வாய் வைத்தது நீரைக்குடிக்க அல்ல, தனது இணைமான் தானும் நீர் குடித்ததாக எண்ணி முழு நீரையும் குடிக்கட்டும் என்பதற்காக நீரைக் குடிப்பது போல நடிக்கவே அவை நீரில் வாய் வைத்தன! – என்ற அற்புதமான நிகழ்வு உள்ளது!.

சங்க காலத்தின் பின் வந்த காப்பியக் காலம், பக்தி இலக்கியக் காலம் ஆகியவற்றில் கூட தமிழ்ச் சமுதாயம் காதலைப் போற்றி உள்ளது. இராவணனிடம் இந்திரசித்தன் பேசும்போது, ‘உன்மேல் கொண்ட காதலால் சொன்னேன்’ – எனக் கூறுவதாக கம்பன் எழுதுகிறான்.

திருஞான சம்பந்தர், முக்தியடையும் முன்னர் நிறைவாகப் பாடிய நமச்சிவாயத் திருப்பதிகம், ‘காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி’ – என்று காதலுடன்தான் தொடங்குகிறது.

தமிழ்ச் சமூகத்தின் காதல் குறித்த எண்ணங்களும், சிந்தனைகளும், கவிதைகளும் உலக அரங்கை இன்னும் முழுமையாக எட்டவில்லை. தமிழக மக்கள் கூட இவற்றைப் பொதுவெளியில் பகிர்வது இல்லை.

இன்றைக்கு காதல் கவிதைகள் என்றாலேயே உலகம் ஆங்கிலக் கவிதைகளைத்தான் மேற்கோள் காட்டுகின்றது. ஆனால் ஆங்கிலக் கவிதைகளையும் தாண்டிய காதல் சிந்தனைகள் தமிழில் உண்டு. ஆனால் தமிழ் இலக்கியங்கள் காதல் போலவே காமத்தையும் விரிவாகப் பேசியதனால், தொடக்ககாலத்தில் தமிழ்ப் பாடல்களை மொழி பெயர்த்த ஆங்கில பாதிரியார்களால் அவை மொழிபெயர்க்கப்படவில்லை. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு.போப் அவர்கள் கூட காமத்துப்பாலை மொழி பெயர்க்கவில்லை. இப்போதுள்ள தமிழ்ப் பாடநூல்களும் சங்க இலக்கியங்களில் உள்ள போர், அறம், கொடை – குறித்த பாடல்களைப் போற்றும் அளவுக்கு காதல் குறித்த பாடல்களைப் போற்றுவது இல்லை. தமிழ்ச் சமுதாயம் அந்நியர் கலப்பினால் இழந்தது மொழி உணர்வை மட்டுமல்ல காதல் உறவையும் கூடத்தான்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

வெள்ளைக் காகிதம் ஏன் டெம்மி பேப்பர் என அழைக்கப்படுகின்றது?

Admin

திருஷ்டி பூசணிக்காயாக சன்னி லியோன்… சோகத்தில் ரசிகர்கள்…!

Admin

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

ஜெய்பீம் காலண்டர் காட்சி சர்ச்சை – நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

விமானத்தில் தொலைத்த பெட்டிக்காக இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்த இளைஞர்!

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

மிரட்டும் காளை .. ட்ரெண்டிங்கில் கலக்கும் வாடிவாசல்!

Admin

கால்நடை என்ற சொல் ஏன் மனிதர்களுக்குப் பொருந்தாது?.

Admin

காளைகளைக் காப்பாற்றினோம்… யானைகளை?: அழிவின் விளிம்பில் தமிழர் செல்வம்!.

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 9. ’24 வகை தொழிற்கை முத்திரைகள்’ – ஒரு நினைவூட்டல்.

மா. இராசமாணிக்கம் என்னும் மாபெரும் தமிழ் ஆளுமை! – அழிக்கப்பட்ட தமிழ் ஆய்வாளர் குறித்த ஆவணப் பதிவு.

1 comment

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா? – Mei Ezhuththu February 20, 2024 at 8:30 pm

[…] தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்பு… […]

Reply

Leave a Comment