பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த எம்.பி பாபுல் சுப்ரியோ தனது முடிவை தற்போது மாற்றிக்கொண்டுள்ளார்.
பாலிவுட்டில் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாபுல் சுப்ரியோ 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அசன்சோல் தொகுதியின் எம்.பியாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் பதவி வகித்து வந்த பாபுல் சுப்ரியோ சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றம் காரணமாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதிருப்தி அடைந்த அவர் சில தினங்களுக்கு முன், அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால் அவர் எம்பி பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை பாபுல் சுப்ரியோ சந்தித்து பேசினார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு எம்பியாக தனது கடமையை தொடரவிருப்பதாககும், அரசியலில் இருந்து விலகுவது மற்றும் டெல்லியில் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவது ஆகிய முடிவுகளில் மாற்றமில்லை என்றும் தெரிவித்தார்.