பொருளாதார நெருக்கடி, கொரோனா பரவல் போன்ற பல்வேறு காரணங்களால், இலங்கையில் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே பொருளாதார அவசர நிலையை பிறப்பித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இலங்கை பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக நாட்டின் முக்கியமான வருவாய்த் துறையான சுற்றுலாதுறை முடங்கியதால் இலங்கையின் பண மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது.
இதனால் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், உணவுப்பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நாட்டில் பொருளாதார அவசர நிலையை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட முக்கிய உணவுப்பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் எரிபொருளை சிக்கனமாக உபயோகிக்கும்படி வாகன ஓட்டிகளை இலங்கை எரிசக்தித் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.