கடந்த மாதத்தை போலவே இந்த மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்ந்து 877 ரூபாய்க்கு விற்பனையாவதால், இல்லத்தரசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 610 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் 710 ரூபாய்க்கு விற்பனையானது. இவ்வாறு படிப்படியாக உயர்ந்த சிலிண்டர் விலை மார்ச் மாத தொடக்கத்தில் 835 ரூபாய்கு விற்பனை செய்யப்பட்டது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டதையடுத்து, சிலிண்டர் விலை 835லிருந்து 10 ரூபாய் குறைக்கப்பட்டு, 825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதிலிருந்து மூன்று மாதங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த மாதம் 25 ரூபாய் அதிகரித்து 850.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மூன்று மாதங்களுக்குப் பிறகு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று 25 ரூபாய் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் இல்லத்தரசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.