இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா 2வது அலை மெல்ல குறைந்து வந்த நிலையில், தற்போது டெல்டா ப்ளஸ் வகை கொரோனா பரவ தொடங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அனுமதி வழங்கியது.
இதனிடையே ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கக்கோரி ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசிடம் அனுமதி கோரியது.
இந்நிலையில் ஜான்சன் அண்டு ஜான்சன் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கெனவே கோவிஷீல்டு, கோவாக்சின், மாடர்னா, ஸ்புட்னிக் V ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தாவதாக ஜான்சன் அண்டு ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.