கேரளாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, மாநிலத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும்நிலையில் கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வரும் போதிலும் பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை.
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 22 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த தினசரி பாதிப்பில் 50 சதவீத எண்ணிக்கை கேரளாவில் பதிவாவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வரும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.