கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வில் சதுர வடிவ வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
கீழடியில் ஏற்கனவே தங்கத்தில் ஆன பொருள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது சதுர வடிவிலான வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. நாணயத்தின் முன்புறம் சூரியன், நிலவு, விலங்குகள் உள்ளிட்ட உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
முத்திரை நாணயம் என்ற வகையைச் சேர்ந்த நாணயம் இது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. ஏற்கனவே கீழடி அகழாய்வில் ரோமான்ய எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.
வைகை நதியோரம் உள்ள கீழடியில் பண்டைய காலத்தில் வணிகம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில் தற்போது கிடைத்துள்ள வெள்ளி முத்திரை நாணயம் வணிகத்திற்கு பயன்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.