அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இந்த காப்பீடு திட்டம் 2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை சுமார் 4 ஆண்டு காலத்துக்கு அமலில் இருக்கும் என்றும், இதற்காக தமிழ்நாடு அரசு யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள 1,169 மருத்துவமனைகளில் 203 வகையான சிகிச்சைகளுக்கு காப்பீட்டுத் தொகை அனுமதிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும், அரிய வகை சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவோர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொருவரிடமும் மாதந்தோறும் ரூ.300 பிடித்தம் செய்யப்படும். அதேசமயம் இந்த காப்பீட்டுத் திட்டம் ஒப்பந்த ஊழியர்களுக்கு பொருந்தாது.
காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாத மருத்துவமனைகளில் ஏதேனும் அவசரத்தின் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், அதற்கான தொகை பின்னர் வழங்கப்படும் என அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.