புதுச்சேரி அரசு மதுபானங்களுக்கு 20% கூடுதல் வரி விதித்து உத்தரவிட்டுள்ளது மது பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுவையில் கடந்தாண்டு கொரோனா காரணமாக மார்ச் மாதத்தில் மூடப்பட்ட மதுக்கடைகள் 2 மாதங்களுக்குப் பிறகு மே 24 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
அப்போது தமிழகத்துக்கு இணையாக மதுபானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது. இந்த வரி கடந்த ஏப்ரல் மாதம் வரை அமலில் இருந்தது. அதன்பின் சட்டமன்ற தேர்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு அதிகபட்ச சில்லரை விலையுடன் கூடுதலாக 20 சதவீதம் சிறப்பு வரி விதித்து திடீரென மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த வரி விதிப்பு இன்று முதல் (ஜூலை 15 ஆம் தேதி ) அமலுக்கு வருகிறது.
இதனால் ரூ.100க்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் இனி 20% சிறப்பு வரி சேர்த்து ரூ.120-க்கு விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.