கொரோனாவுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் மனிதர்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமடைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவை மாநில அரசுகள் அமல்படுத்தின. மேலும் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது.
தடுப்பூசி பற்றாக்குறையை போக்க, இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்நிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அண்மையில் இந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதால், இளம்பருவத்தினருக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.
இந்தநிலையில், இது தவறான தகவல் என்றும், தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதற்கு விஞ்ஞான பூர்வமாக எந்தவொரு ஆதாரமும் நிரூபிக்கப்படவுமில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தடுப்பூசிகளானது விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு, அதன் செயல்திறன் மற்றும் பக்கவிளைவுகளை நன்கு ஆராய்ந்த பின்னரே, மனிதர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டதாக அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.