இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
சென்னை:
2021ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நேற்று தொடங்கின. தொடரின் முதலாவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
ஹர்ஷல் படேல் எடுத்த 5 விக்கெட்களும், டிவில்லியர்ஸின் வழக்கமான அதிரடி ஆட்டமும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தன. 4 ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே கொடுத்து இஷான் கிஷன், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குருனல் பாண்டியா, ஜான்சென் ஆகிய 5 பேரின் விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் ஆனார் படேல். டிவில்லியர்ஸ் 27 பந்துகளில் 48 ரன் எடுத்து RCB யோட இக்கட்டான சூழ்நிலையை சரி செய்தார்.
பீல்டிங்கில் மூன்று கேட்ச்களை தவற விட்டது, சுந்தரை தொடக்க வீரராக்க களம் இறக்கியது, பட்டிதாரை மூன்றாவது வீரராக களமிறக்கியது என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பல வகைகளிலும் சறுக்கினாலும், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸின் ஆட்டத்தால் அது வெற்றியை எட்டியுள்ளது. ஒரு வகையில் சுலபமாக வெல்ல வேண்டிய ஒரு ஆட்டத்தை தாங்களே கடினமாக மாற்றி, போராடி வென்றனர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினர் என்றும் இதனைச் சொல்லலாம்.
- சே.கஸ்தூரிபாய்