பட்டாணி குடும்பத்தைச் சேர்ந்த நிலத்தடியில் காய்க்கும் தாவரமான நிலக்கடலையை ஆதி இந்தியர்கள் உண்டது இல்லை. தென்னமெரிக்க நாடான பெரு-வில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே உணவாகப் பயன்படுத்தப்பட்ட இந்த நிலக் கடலையானது தமிழகத்திற்குள் பிலிப்பைன்ஸ் நாட்டினரின் தாக்கத்தால் நுழைந்தது!.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவில் விளைந்து தமிழகத்திற்குள் வந்த நிலக் கடலைகளை மக்கள் மணிலா அல்லது மணிலா கொட்டை என்ற பெயர்களில் அழைத்தனர். மணிலா கொட்டை என்ற சொற்கள்தான் திரிந்து இப்போது மல்லாட்டை என வழங்குகின்றது.
மணிலா என்ற சொல் பிலிப்பைன்ஸ் தலைநகரமான மணிலாவுடன் தொடர்புடையதுதான் என்று காட்டக் கூடிய இன்னொரு சான்று ‘மணிலா கயிறு’ ஆகும். ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் தூக்கு தண்டனைக்கான கயிறுகள் பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது இந்தக் கயிறுகள் பிஹாரின் பக்ஸர் சிறையில் தயாரிக்கப்பட்டாலும் தூக்குக் கயிறை ‘மணிலா கயிறு’ என்று அழைக்கும் வழக்கம் மட்டும் இந்தியாவில் இன்னும் மாறவில்லை.
இன்னொரு பக்கம் உலகில் வேர்கடலை உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவின் பல இடங்களில் வேர்க்கடலையும் மணிலாவின் பெயரால்தான் நினைவு கூரப்படுகின்றது!. வரலாற்றின் தடங்கள் எவ்வளவு வலிமையானவை என்பதற்கு இதை ஒரு உதாரணமாக நாம் கொள்ளலாம்!.
இரா.மன்னர் மன்னன்