புதுடெல்லி:
கொரோனா பரவல் காரணமாக வாகனப் பதிவு புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் ஆகிய பணிகளுக்கு மீண்டும் 3 மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் இந்தியா தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. எனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகள் பல்வேறு அமைச்சகங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக வாகனங்களைப் பயன்படுத்தும் மக்கள் தங்கள் வாகனப் பதிவை புதுப்பிக்கவும், வாகன ஓட்டிகள் தங்கள் உரிமத்தைப் புதுப்பிப்பதற்குமான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
வாகனப் பதிவு மற்றும் ஓட்டுநர் உரிம புதுப்பித்தலுக்கு மார்ச் 31ஆம் தேதிவரை கால அவகாசம் இருந்த நிலையில் இன்னும் மூன்று மாத கூடுதல் கால அவகாசம் மக்களுக்கு இதனால் கிடைக்கும். எனவே ஜூன் 30ஆம் தேதிக்குள் மக்கள் இவற்றைப் புதுப்பித்தால் போதும். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டில் இருந்து இந்த கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
நமது நிருபர்