மே.வங்கத்தில் இன்று தொடங்கிய முதற்கட்ட தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையத்தின் முன் வைத்துள்ளது.
ஐந்து மாநில தேர்தல்கள் மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் முதற்கட்டத் தேர்தலோடு இன்று தொடங்கின. மேற்கு வங்கத்தில் இன்று 30 தொகுதிகளின் முதற்கட்ட தேர்தலோடு தொடங்கும் பேரவைத் தேர்தலானது ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் எட்டாம் கட்ட தேர்தலோடு நிறைவடையும்.
இந்நிலையில் முதற்கட்ட தேர்தலை எதிர்கொண்டுள்ள மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாக்குப் பதிவில் முறைகேடுகள் நடப்பதாக அடுத்தடுத்த புகார்களைத் தெரிவித்து உள்ளது.
காந்தி தக்ஷின் என்ற தொகுதியில் நடைபெற்ற வாக்குப் பதிவின் போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொத்தானை அழுத்தினாலும், ஓட்டு பாஜகவுக்கே விழுகின்றதாக விவிபாட் எந்திரம் காட்டியது என்று அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் குற்ரச்சாட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் சில தொகுதிகளில் வாக்குப் பதிவு சதவிகிதம் திடீரென குறைக்கப்பட்டு உள்ளதாகவும் புகைப்படங்களோடு திரிணமூல் காங்கிரஸ் டுவிட்டரில் குற்றம் சாட்டியுள்ளது. முதற்கட்ட தேர்தலின் போதே வாக்குப் பதிவு எந்திரத்தின் மீது புகார்கள் எழுந்துள்ளதால் தேர்தல் களம் தற்போது மேலும் சூடாகி உள்ளது.
நமது நிருபர்.