இராமாயணத்தை அதிகம் வாசிக்காத நபர்களுக்குக் கூட அதில் உள்ள காண்டங்கள் எனும் பெரும் பிரிவுகளைப் பற்றித் தெரியும். சுந்தர காண்டம் அவற்றில் மிகவும் புகழ்மிக்கது.
இராமாயணத்தை வாசித்தவர்களுக்கு கம்பரின் இராமாயணத்தில் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு காண்டங்கள் இருப்பது தெரியும். இதன் தொடர்ச்சியாக ஏழாவது காண்டமான உத்தர காண்டத்தை ஒட்டக் கூத்தர் எழுதினார். ஆனால் ‘தியாகக் காண்டம்’ என்ற பெயர் அனைவருக்கும் புதிதானதாக, ஆச்சர்யம் தருவதாக இருந்திருக்கும். பலரும், ‘தியாக காண்டம் யார் எழுதியது?’ என்ற யோசனையிலும் இருப்பீர்கள்.
கம்ப இராமாயணத்தின் அயோத்தியா காண்டத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயரே தியாகக் காண்டம் என்பது ஆகும். இந்தக் காண்டத்தில் உள்ள தியாகங்களே இந்தப் பெயருக்குக் காரணங்களாக உள்ளன. அப்படி என்னென்ன தியாகங்கள் அயோத்தியா காண்டத்தில் நடந்தன? – வாருங்கள் பார்ப்போம்….
1. தசரதன் தனது வாக்கைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைத் தியாகம் செய்கிறார்.
2.ராமன் தனது தந்தையின் வாக்கைக் காப்பாற்ற அரசு உரிமையைத் தியாகம் செய்கிறார்.
3. பிறந்ததில் இருந்து தரையில் நடந்து அறியாத சீதை கணவனுக்காக அரச போகங்களைத் தியாகம் செய்து காட்டுக்கு போகிறார்.
4. இராமனைக் காக்க எண்ணிய சுமத்திரை தனது மகன் இலட்சுமணனைத் தியாகம் செய்கிறார்.
5. இலட்சுமணனின் மனைவி ஊர்மிளையும் இவர்களுக்காகத் தனது கணவனைத் தியாகம் செய்கிறார்.
6. பரதன் தனக்குக் கிடைத்த அரசாட்சியை இராமனுக்காகத் தியாகம் செய்து இராமனின் பாதுகைகளை வைத்து அரசை நடத்துகிறார்.