சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்தால் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடைந்தன.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். இதனை எதிர்த்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வழக்கம்போல வெளிநடப்பு செய்தனர்.
இதற்கு முன்பாக சபாநாயகர் அப்பாவு பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனை பேச அனுமதித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த இஸ்லாமியர்களுக்கும் எதிரான சட்டமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
அப்போது இடைமறித்த சபாநாயகர் அப்பாவு, “இந்தச் சட்டம் என்றால் முதலமைச்சர் கொண்டுவந்த சட்டமா?” என்று கேள்வி எழுப்ப அவையில் சிரிப்பொலி எழுந்தது. உடனே நயினார் நாகேந்திரன் நான் சொல்வது மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை குறிப்பிடுவதாக கூறினார்.
தொடர்ந்து ஆதரவாக பேசி வந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என பாஜக எம்.எல்.ஏ.வான நயினார் நாகேந்திரன் கூற ஒருகணம் அங்கிருந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் முகத்தில் அதிர்ச்சி எழ, மறுபக்கம் திமுக எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
உடனடியாக சபாநாயகர், ‘அதைதான் நாங்களும் சொல்கிறோம் நன்றி’ என்று கூறினார்.
தனது தவறை உணர்ந்து சுதாரித்துக்கொண்ட நயினார் நாகேந்திரன், “தவறாக குறிப்பிட்டுவிட்டேன், மத்திய அரசின் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று கூறிவிட்டு வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார்.
அந்த நேரம் சபாநாயகர் அப்பாவு கூட்டணி கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்ததை சுட்டிக்காட்டி உங்களை தனியா விட்டுட்டு வெளிநடப்பு பண்ணிட்டாங்க பாத்தீங்களா என சொல்ல அவையில் சிரிப்பலை எழுந்தது.
அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் போதெல்லாம் தனது சாமர்த்தியமான பதிலால் அவையை அப்பாவு கலகலப்பாகி விடுகிறார் என இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.