நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து மக்கள் தவித்து வரும் நிலையில் கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை குறித்து வெளியாகும் செய்திகள் மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 8000 மேற்பட்டோருக்கு பூஞ்சைத் தொற்று பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்போது கருப்பு , வெள்ளை பூஞ்சையை காட்டிலும் ஆபத்தான மஞ்சள் பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் காஸியாபாத்தில் 45 வயதான ஒரு நோயாளிக்கு மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை பாதிப்புகளைவிட மிகுந்த ஆபத்தானது. மஞ்சள் பூஞ்சை பொதுவாக முதலைகள், பாம்புகள் உள்ளிட்ட ஊர்வன வகை உயிரினங்களிடம் மட்டுமே காணப்படும். தற்போது முதன்முறையாக மனிதர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதீத சோர்வு, பசியின்மை ஏற்படும், மேலும் இந்தத் தொற்று உடலின் உள் உறுப்புகளை பாதிக்கும்.
மற்ற இரண்டு பூஞ்சை நோய்த்தொற்றுகளை போலல்லாமல் இது உட்புறமாக தொடங்குகிறது – என்பதால் இது கூடுதல் அபாயம் உள்ளது. Amphotericin-B எனப்படும் பூஞ்சை தடுப்பு மருந்து முதன்மையான மருத்துவம் ஆகும். தற்போது இந்த மருந்து தான் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
அதிக அளவிலான ஸ்டெராய்டுகளை எடுத்துக்கொள்வது, சுற்றுப்புறத் தூய்மையின்மை, பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள், சீரற்ற ஆக்ஸிஜன் பயன்பாடு போன்றவையே பூஞ்சை தாக்குதலுக்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் நெரடி விளைவுகளோடு இது போன்ற மறைமுக விளைவுகளுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டிய காலமாக இது உள்ளது.
– பிரியா வேலு