நமது நிருபர்
2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை எழுத்தாளர் இமையம் தனது செல்லாத நோட்டு நாவலுக்காகப் பெறுகிறார்.
இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 24 இந்திய மொழிகளில் எழுதப்படும் சிறந்த நூல்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது. இந்த விருதானது தாமிரப் பட்டயத்தையும் ரூ.1 லட்சம் தொகையையும் உள்ளடக்கியது.
கடந்த 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதை எழுத்தாளர் இமையம் அவர்களின் ‘செல்லாத பணம்’ நாவல் பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வெ.அண்ணாமலை என்ற இயற்பெயர் கொண்ட இமையம் அவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். எளிய குடும்பப் பின்னணியும் வலுவான இலக்கிய அறிவும் கொண்டவர். திராவிட இயக்கம் சார்ந்த சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர்.
கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங்கதெ – ஆகிய நாவல்களையும், பல்வேறு சிறுகதைகளையும் இவர் எழுதி உள்ளார். இவரது சிறுகதைகள் இதுவரை 4 தொகுப்புகளாக வெளிவந்து உள்ளன. இவரது கோவேறு கழுதைகள் நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்ப்ட்டு உள்ளது. இவரது பெத்தவன் என்ற சிறுகதை தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டு திருப்பதி பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, பெரியார் விருது, இயல் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகிய விருதகளைப் ஏற்கனவே பெற்றுள்ள இவருக்கு சாகித்ய அகாடமி விருதும் தற்போது வசப்பட்டு உள்ளது.
எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!.