தமிழக அரசியலில் அண்மைக்காலமாக நடைபெறும் நிகழ்வுகள் தொடர்ந்து பொதுவெளி நாகரிகத்தை வெளிப்படுத்தி வருகின்றன. எலியும் பூனையுமாக மேடைகளில் விமர்சித்துக் கொள்ளும் தலைவர்கள் வீடுகளில் துக்க நிகழ்வுகள் நடக்கும்போது தலைவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் நேரில் சந்தித்து துணையிருப்பதாக வெளிப்படுத்துவதும் தொடர்ந்து வருகின்றன.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைந்தபோது, முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இந்தப் படங்கள் அப்போது சமூக வலைதளங்களில் வைரலாகின.
பின்னர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானபோது தொலைபேசி மூலம் அழைத்து ஆறுதல் சொன்னார் முதல்வர் ஸ்டாலின். இதுபோன்ற நிகழ்வுகள் தமிழக அரசியலில் நல்ல நாகரிகம் தழைத்து வருவதாக நம்பிக்கையை ஊட்டின.
இந்த வரிசையில், பெங்களூரு சிறையில் இருந்து வந்தபிறகு சசிகலாவும் இணைந்துகொண்டார். அந்த நொடி தொடங்கி, எடப்பாடி பழனிசாமி இந்த பொதுவெளி நாகரிகத்தைக் கூட மதிக்காமல், சசிகலா உடனான சந்திப்பைத் தவிர்த்து வருகிறார்.
ஆம், அதிமுகவில் எக்காரணம் கொண்டும் சசிகலா சேர்க்கப்பட மாட்டார் என்று மீண்டும் மீண்டும் அழுத்தமாக சொல்லிக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா வரும்போதெல்லாம் அதிமுக உறுப்பினர்கள் அங்கேயே இருக்கிறார்கள். அவர் மட்டும் சத்தமில்லாமல் சென்று விடுகிறார்.
அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் !
சிறையிலிருந்து வந்தபிறகு தாயார் மறைவுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக சசிகலா எடப்பாடி பழனிசாமியைச் சந்திப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், நிகழவில்லை.
பின்னர் அதிமுக மூத்த தலைவரும் அவை முன்னவருமான மதுசூதனன் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் இருந்தபோது அவரைச் சந்திக்க மருத்துவமனைக்கே வந்தார் சசிகலா. அப்போது எடப்பாடி பழனிசாமியும் உள்ளே இருந்தார். ஆனால், இருவருக்குமான சந்திப்பு நிகழவேயில்லை. யாருக்கும் சொல்லாமல் எடப்பாடி பழனிசாமி கிளம்பியிருந்தார்.
பின்னர் மதுசூதனன் மறைவின்போதும், இதேபோல சசிகலா வந்ததும் எடப்பாடி பழனிசாமி கிளம்பிவிட்டார். இறுதி ஊர்வலத்தில் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் நடந்தேசென்று இறுதி மரியாதை செலுத்தினார். அதே சமயம் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்டோர் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வுக்குப் பிறகுதான் எடப்பாடி பழனிசாமி ஏன் ஓடி ஒளிகிறார் என்று கேள்விகள் வெளிப்படையாக உலவத்தொடங்கின.
ஜெயலலிதா பல்கலை., விவகாரம்…ஓபிஎஸ் உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் கைது…
இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாகத்தான் சம்பவங்கள் நேற்றும் நடந்தன. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து இந்த நிகழ்வுக்கு ஆறுதல் சொல்ல முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் மருத்துவமனைக்கே நேரில் வந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமியும் உடன் இருந்தார்.
பின்னர் சசிகலாவும் மருத்துவமனைக்கு வந்து ஓ.பன்னீர்செலவத்தை சந்தித்து கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார். அந்தச் சமயம் எடப்பாடி பழனிசாமி அங்கு இல்லை. சந்திப்பு நிகழ்ந்துவிடவே கூடாது என்பதில் மீண்டும் மீண்டும் கவனமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
சசிகலாவை அதிமுகவை விட்டே நீக்குங்கள் என்று தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் சந்தித்துவிட்டார். ஆனால், சசிகலாவால் முதலமைச்சராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஓடி ஒளிகிறார். கோபமா? குற்ற உணர்ச்சியா?
பகையாளியாகவே இருந்தாலும் துக்க வீட்டில் குரோதம் பார்க்கக்கூடாது என்பது தமிழர் வாழ்வியல். இந்தப் பண்பு எப்போதும் அவசியமான ஒன்றாக இருந்த நிலையில், ஜெயலலிதா-கருணாநிதி காலத்துக்குப் பிறகு இந்த நாகரிகம் மீண்டும் அரசியலில் தழைத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், “இந்த நாகரிகத்தைக் கூட காப்பாற்ற முடியாத அளவுக்கு சசிகலாவுடன் பகைமை பாராட்டுகிறாரா எடப்பாடி பழனிசாமி?” அல்லது “குற்ற உணர்ச்சி எடப்பாடி பழனிசாமியை உறுத்துகிறதா?” என்ற கேள்விகள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன.